மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போருக்கு தமிழக மக்களை தள்ளிவிட வேண்டாம் !!  பாஜகவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை…

First Published Aug 26, 2017, 8:13 AM IST
Highlights
stalin speech in periyar thidal


இந்தியை தமிழகத்துக்குள் திணிக்கும் முயற்சியை பாஜக அரசு கைவிட வேண்டும் என்றும், இந்தியை எதிர்ப்பது கோபத்தால் அல்ல, தமிழ் மீது இருக்கும் அளவற்ற காதலால்தான் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகம் சார்பில் இந்தி–சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு மாநாடு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில்  நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய, மு.க.ஸ்டாலின், 1968–ம் ஆண்டு ஜனவரி 23–ந் தேதியை தமிழினம் ஒருபோதும் மறக்காது. அன்றைய தினம் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று, வெற்றி பெற்றது. தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு விடை கொடுத்து, இரு மொழி கொள்கை தொடங்கப்பட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டம் வெற்றி பெற்ற பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தின், தொடக்க நிகழ்வாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது என தெரிவித்தார்.

தற்போதும், இந்தியை எதிர்ப்பது கோபத்தால் அல்ல என்றும் தமிழ் மீது உள்ள அளவற்ற காதலால் தான் என்று தெரிவித்தார்.

என் மொழியில் வளரவிடுங்கள், என் மொழியிலேயே படிக்கவிடுங்கள் என்பதற்காகத்தான் போராடுகிறோம். தமிழ் மொழிக்காக திராவிட இயக்கத்தின் போராட்டம் உணர்வு மிக்கது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்..

தமிழ் மொழிக்கான போராட்டத்தில் இருந்து தி.மு.க., திராவிட இயக்கங்கள் ஒருபோதும் பின்வாங்காது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தி திணிப்பு தீவிரமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

.புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எழுத்து அச்சடிக்கும் கொடுமை, நாடாளுமன்றத்தில் இந்தியில் உரை, சி.பி.எஸ்.இ., கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10–ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடம், சென்னை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இந்திக்கு முன்னுரிமை என இந்தி திணிப்பு கொடுமை  தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்டாலின் கூறினார்.

இத்தகைய கொடுமைக்கு தமிழகத்தில் உள்ள குதிரை பேர ஆட்சி துணை போவதாகவும், மீண்டும் ஒரு எதிர்ப்பு போருக்கு தமிழகம் தயாராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

click me!