
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த குதிரை பேர அரசை கவிழ்க்க ஒரு நிமிடம் கூட ஆகாது என்றும், ஆனால் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க, திமுக ஒருபோதும் முயற்சிக்காது என அக்கட்சியில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியது. இதற்கு பொது மக்கள் மற்றும் பயணிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தின.
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த குதிரை பேர அரசை கவிழ்க்க ஒரு நிமிடம் கூட ஆகாது என்றும், ஆனால் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க, திமுக ஒருபோதும் முயற்சிக்காது என கூறினார்.
ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு மாதாமாதம் எடப்பாடி பழனிசாமி படியளந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.