ஸ்டாலின் தொடர்ந்து மவுனம்! வாழ்வா? சாவா? இன்று முடிவெடுக்கிறார் வைகோ!

By Selva KathirFirst Published Mar 2, 2019, 12:33 PM IST
Highlights

கூட்டணி விவகாரத்தில் ஸ்டாலின் தரப்பு தொடர்ந்து மவுனம் காப்பதால் வாழ்வா சாவா என்கிற முடிவை வைகோ இன்று எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி விவகாரத்தில் ஸ்டாலின் தரப்பு தொடர்ந்து மவுனம் காப்பதால் வாழ்வா சாவா என்கிற முடிவை வைகோ இன்று எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே ஒரு எம்.பி சீட் என்று கூறி வந்த நிலையில் வைகோ தொடர்ந்து அதிருப்தியில் இருந்த காரணத்தினால் வேண்டுமானால் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக இறங்கி வந்தார் ஸ்டாலின். ஆனால் தனக்கு ஒரு ராஜ்யசபா சீட், ஈரோடு கணேச மூர்த்திக்கு ஒரு மக்களவை சீட் என்று தற்போது ஸ்டாலினிடம் புதிய வேண்டுகோளை விடுத்துள்ளார் வைகோ. ஆனால் சபரீசனோ வைகோவுக்கு அசம்பிளி எலக்சனில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலினிடம் கூறி வருகிறார்.

எத்தனை தொகுதியை வைகோவுக்கு கொடுத்தாலும் ஒன்றில் கூட அவரால் வெல்ல முடியாது, மேலும் வைகோவின் வாக்கு சதவீதமும் ஒரு சதவீத்திற்கும் குறைவு தான் என்று சபரீசன் பிடிவாதம் காட்டி வருகிறார். இதனால் ஒன்று ராஜ்யசபா சீட்டை பெற்றுக் கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள் என்கிற ரீதியில் திமுகவிடம் இருந்து தகவல் சென்றுள்ளது.

இதனால் திமுக கொடுக்கும் வாய்ப்பை ஏற்பதை தவிர வைகோவுக்கு வேறு வழியில்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே ஒரு தொகுதியை பெற்று கணேசமூர்த்தியை போட்டியிட வைப்பதா? அல்லது ராஜ்யசபா சீட்டை பெற்றுக் கொண்டு 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வதா என்கிற யோசனையில் வைகோ ஆழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள்.

தேமுதிக வரவில்லை என்றாலும் கூட வைகோவுக்கு ஒரு சீட்டுக்கு மேல் கிடையாது என்பது தான் திமுகவின் கடைசி முடிவு என்கிறார்கள். எனவே வைகோ திமுக கூட்டணியை தேர்வு செய்யும் விவகாரத்தில் தான் அவரது அரசியல் வாழ்வே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். மக்களவை தேர்தல் சீட்டை பெற்றுக் கொண்டால் வைகோ கட்சியின் பலம் என்ன என்பது மக்களுக்கு தெரிந்துவிடும்.

தி.மு.கவின் மாநிலங்களவை சீட்டை பெற்றுக் கொண்டு 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வது என்பது அந்த கட்சியில் சேர்ந்து கொள்கை பரப்புச் செயலாளர் ஆவது போன்றது. எனவே இந்த விவகாரத்தில் வைகோ மிகவும் தர்மசங்கடமான சூழலில் உள்ளதாக கூறுகிறார்கள். கூட்டணி விவகாரத்தில் இந்த முறையாவது வைகோ உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுக்கவேண்டும் என்று அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

click me!