
காவிரி விவகாரத்தில் போராடுவதற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் மனமார ஏற்க தயார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது. அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர்.
கடந்த 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் சார்பில், சென்னை அண்ணா சாலை மற்றும் மெரினா சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். திடீரென மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பின்னர், ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மறியலில் ஈடுபட்டது தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி உரிமை மீட்பு பயணம் திருச்சி முக்கொம்பில் இன்று தொடங்குகிறது. அதற்காக திருச்சி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி போராட்டத்திற்காக என்மீது போடப்பட்டுள்ள வழக்கை மனமார ஏற்கிறேன். காவிரி விவகாரத்தில் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயாராக இருக்கிறோம் என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.