
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் பொது மக்களின் தண்ணீர் பிரச்சனைக்காக குளத்தில் தூர் வாரும் பணியை துவக்கி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. மக்கள் காலி குடங்களுடன் பல்வேறு பகுதிகளில் அலைந்து திரிந்து கொண்டிருப்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது. இதை பற்றி தமிழக அரசு எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறது.
திமுக ஆட்சியின்போது, மக்களின் தண்ணீர் பிரச்சனையை போக்க பல்வேறு திட்டம் வகுத்து நடவடிக்கை எடுத்தோம். கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் அதில் ஒன்று. ஆனால் 2 முறை ஆட்சி அமைத்தும், அதிமுக அரசு இதுவரை அதனை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை.
தற்போது அதிமுக அரசின் ஒரே குறிக்கோள், யார் முதலமைச்சர் பதவியில் உட்காருவது என்பதுதான். அதில் தான் அவர்கள் போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது நண்பர்கள், உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எந்த பதிலும் யாரும் சொல்லவில்லை.
தற்போது ஒரு பெண் அமைச்சர், அதிகாரி ஒருவரை பகிரங்கமாக மிரட்டினார். இதை அவர் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். அதை பற்றி தொலைக்காட்சியிலும் பேட்டி அளித்துள்ளார். இதுபற்றி தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. அவரை பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
அதை சில ஊடகங்கள் மட்டுமே வெளியே கொண்டு வந்தது. மற்ற ஊடகங்களில் வரவில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை.
தொடர்ந்து அமைச்சர்கள் பல சர்ச்சைகளில் சிக்குகிறார்கள். அதை எடப்பாடி தலைமையிலான அரசு ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்பதை நீங்கள்தான் கேட்க வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவுக்கு பாஜகவினரை அழைக்கவில்லை என கூறுகிறார்கள். காரணம், ஏற்கனவே திராவிட கட்சிகளை அழிக்க வேண்டும் என துடிக்கிறார்கள். அந்த நேரத்தில், அவர்களை அழைத்து மேடையில் உட்கார வைத்து தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என நினைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.