குட்கா விவகாரத்தில் சட்டப்படி மோதிப் பார்க்கலாம் !! எடப்பாடி அரசுக்கு சவால் விடும் மு.க.ஸ்டாலின் !!!

First Published Aug 29, 2017, 4:51 AM IST
Highlights
stalin press meet about the gutka problem


எடப்பாடி பழனிசாமியின் மைனாரிட்டி ஆட்சி நிலைக்க குட்கா விவகாரத்தைப் பயன்படுத்தி திமுக எம்.எல்.ஏக்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாக குற்றம்சாட்டிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அதனை சட்டப்படி  சந்திப்போம் என சவால் விடுத்தார்.

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கூறி, தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஜூன் 17-ம் தேதி சட்டசபைக்கு குட்கா பாக்கெட்டுகளை கொண்டு வந்து புகாரளித்தனர். சபாநாயகரின் முன் அனுமதி இல்லாமல் குட்கா பொருளை சபைக்குள் கொண்டு வந்ததாக கூறி அவர்கள் மீது உரிமைக்குழுவில் புகாரளிக்கப்பட்டது.

இது குறித்து விசாரிப்பதற்காக 17 உறுப்பினர்களை கொண்ட சட்டசபை உரிமைக்குழு நேற்று  கூடியது.

பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில், அ.தி.மு.க சார்பில் ஓபிஎஸ் ,  செங்கோட்டையன், கீதா, சரவணன், பரமேஸ்வரி, மருது முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டி.டி.வி தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் ஏழுமலை, ஜக்கையன், தங்கதுரை ஆகியோருக்கு அழைப்பு விடுக்காததால் அவர்கள் பங்கேற்கவில்லை.

தி.மு.க சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், மதிவாணன், ரகுபதி, ரவிச்சந்திரன், பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்றனர். மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் கொறடா விஜயதாரிணி கலந்துகொண்டார். கூட்டத்தில், ஜுன் 17 ஆம் தேதி பதிவான சட்டப் பேரவை காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து,  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு 7 நாட்களுக்குள்  விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  தி.மு.க, செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியதில் சதி உள்ளதாக குற்றம்சாட்டினார்..

இந்த விவகாரத்தில் சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும், எடப்பாடி பழனிசாமியின் மைனாரிட்டி ஆட்சி நிலைக்க வைக்க திமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

 

 

click me!