
வறட்சி காரணமாக தமிழகத்தில் 250க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பயிர் வாடியும், கருகியும் போனதால் பல விவசாயிகள் அதிர்ச்சியில் இறந்தனர்.
இதைதொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதைதொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. டெல்லியில் அய்யாகண்ணு தலைமையில் நாள் தோறும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த போராட்டங்களுக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கின்றனர். இதுவரை அதுபற்றி எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 16ம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் (16ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
இதில், விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்படும். கூட்டத்துக்கான அழைப்பை ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் அனுப்பப்பட்ட உள்ளது என்றார்.