
என்னதான் தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், தமிழகத்தில் பாஜக காலூன்றுவது என்பதே சாத்தியம் இல்லை. அதற்கேற்ப தமிழகத்தில் தலைவர்களும் இல்லை என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளது பாஜக.
அதற்காக, தமிழகத்தில் இரு பெரும் இமயமாக இருக்கும் அதிமுக மற்றும் திமுகவை உடைப்பது முதல் வேலை. அடுத்து, பல துண்டுகளாக சிதறும் குழுக்களை ஒன்றாக்கி ஒரு கூட்டணியை உருவாக்குவது. அந்த கூட்டணியை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, தமக்கும் கொஞ்ச இடங்களை பீராய்ந்து கொள்வதுதான் பாஜகவின் திட்டம்.
மறுபக்கம், ரஜினி, கமல், விஷால் போன்ற நடிகர்களை பாஜகவுக்கு நேரடியாக கொண்டு வருவது, அல்லது பாஜக அரவணைப்பில் வைத்துக் கொள்வது இரண்டாவது திட்டம்.
அந்த திட்டத்தின்படி, அதிமுக உடைக்கப்பட்டு விட்டது, ஒரு வேலை கட்சியின் பெயரும், சின்னமும் கொடுப்பதாக இருந்தால் அதை பன்னீர்செல்வத்திற்கு கொடுப்பது. இல்லையெனில் அந்த தடயத்தையே அழிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு, ஒரு பக்கம் அந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அடுத்து, திமுகவை உடைக்க, ஏற்கனவே வழக்குகளில் சிக்கியுள்ள, ஆ.ராசா, கனிமொழி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்டவர்களை, சசிகலா பாணியில், சிறையில் தள்ளி திணறடிப்பது. மறுபக்கம் அழகிரி, கனிமொழி ஆகியோர் மூலம் திமுகவையும் மூன்றாக உடைப்பது என்றும் திட்டம் தீட்டப்பட்டு, அந்த வேலையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா என்ற ஒரு ஆளுமை இறந்தது, அதிமுகவை உடைக்கும் வேலையை எளிதாக்கி விட்டது. கருணாநிதியின் செயலிழப்பு, திமுகவை உடைக்கும் வேலையையும் எளிதாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
கருணாநிதி அளவுக்கு ஸ்டாலினுக்கு, தொண்டர்களை அரவணைத்து செல்லும் திறனோ, வசீகரிக்கும் திறனோ இல்லாததும், அழகிரி, கனிமொழி போன்றவர்களை ஓரம்கட்டி ஸ்டாலின் நடத்தும் அரசியலும், திமுகவை உடைக்க போதுமானது என்று பாஜக நம்புகிறது.
இந்த வேலைகள் அனைத்தையும், வரும் டிசம்பருக்குள் முடித்து, உடனடியாக சட்டமன்ற தேர்தலை நடத்த மோடியும், அமித் ஷாவும் விரும்புகிறார்கள்.
அதே சமயம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து, தன்னெழுச்சியாக திரளும் தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பாஜக வின் திட்டத்தை உடைத்து விடுவார்கள் என்ற அச்சமும் பாஜக விற்கு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.
ஆகவேதான், இளைஞர்கள் எக்காரணம் கொண்டும் எந்த இடத்திலும் திரண்டுவிடக் கூடாது என்று போலீசாருக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜியோவின் இலவச இன்டர்நெட் திட்டம் கூட, இளைஞர்களின் கருத்து பரிமாற்றத்தை எளிதாக கண்காணிக்க ஏற்படுத்த திட்டம் என்றும், அதற்கு பின்னால் மத்திய அரசு இருக்கிறது என்றும் ஒரு சாரார் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
பாஜகவின் இந்த ரகசிய திட்டத்தை எதிர்த்து போராடும் வலிமையை, இங்குள்ள அனைத்து கட்சிகளும் இழந்து விட்டன. மற்றவை பாஜகவிடம் விலை போய்விட்டன என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
அதையும் மீறி எந்த கட்சியாவது, பாஜகவுக்கு எதிராக களம் புகுந்தால், ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சியாக இருந்தால், அதில் உள்ள முக்கிய தலைவர்களின் மீதுள்ள, லஞ்சம், ஊழல், மோசடி வழக்குகள் மூலமாக தாக்குதலை சந்திக்க சந்திக்க நேரும்.
அதனால், எந்த கட்சியையும் சாராத, அரசியல் தலைவர்களை ஏற்காத, யாருடைய முகத்தையும் அடையாளம் காட்டாத இளைஞர்கள் மட்டுமே, பாஜகவுக்கு தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஒரு வேளை, எந்த வழியிலாவது இளைஞர்கள் பாஜகவுக்கு எதிராக, ஒன்று திரண்டால், அதில் சமூக விரோதிகள் ஊடுருவி இருக்கிறார்கள் என்று, சிலர் மீது தேச துரோக வழக்கை பாய்ச்சவும் திட்டம் தீட்டி உள்ளது பாஜக.
எனவே, தமிழகத்தை பொறுத்தவரை, வரப்போகும் தேர்தல் என்பது, பாஜகவுக்கும் இளைஞர்களுக்குமான போட்டியாகத்தான் இருக்கும் என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.