தமிழக சட்ட மன்றத்தில் ஒரு வாரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்… ஆளுநருக்கு ஸ்டாலின் கெடு!

First Published Sep 10, 2017, 5:50 PM IST
Highlights
stalin met governer


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றத்தில் மெஜாரிட்டி இல்லை என்றும், அவருக்கு எதிராக 119 எம்எல்ஏக்கள் உள்ளதால் ஆளுநர் உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.  இதற்காக ஸடாலின் ஆளுநருக்கு ஒரு வாரம் கெடு வித்த்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் அணிகள் இணைந்த பின்னர், டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 21 பேர் முதலமைச்சருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றனர்.

இதனால், எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மை இழந்து விட்டது என கூறி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. நேரிலும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இதுவரை ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று மு.க.ஸ்டாலின். துரைமுருகன், மா.சுப்ரமணியம், சேகர் பாபு, பொன்.முடி, தா.மோ.அன்பரசன், ஜெ.அன்பழகன், எ.வ.வேலு மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ அபு பக்கர் உள்ளிட்டோர் ஆளுநரை நேரில் சந்தித்து  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு 114  எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்றும், அவருக்கு எதிராக திமுகவின் 89 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியின் 8 எம்எல்ஏக்களும், இந்திய யூனியன் முஸ்லீம் எம்எல்ஏ  ஒருவர் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் என மொத்தம் 119 பேர் உள்ளதாக தெரிவித்தார்.

இதனால் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை இழந்து விட்டதாகவும், அவர் சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட் வேண்டும் என அவரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

இது குறித்து ஒரு வாரத்திற்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் சட்டரீதியான இப்பிரச்சனையை எதிர்கொள்ளப் போவதாகவும் ஆளுநரிடம் தெரிவித்தாக  ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இனி ஆளுநர் மாளிகைக்கு வரப்போவதில்லை என்றும், நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இதை சந்திக்கப் போவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

 

 

 

click me!