தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதை விட தனியே நின்று தோற்கலாம்: வைகோவை உலுக்கும் கடிதம்!

First Published Sep 10, 2017, 4:41 PM IST
Highlights
mdmk party member wrote a letter to vaiko


’தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதை விட தனித்து நின்று தோற்றும் கூட போகலாம்!’ என்று தனக்கு வந்திருக்கும் தொண்டர் கடிதத்தை பார்த்து யோசனையில் ஆழ்ந்திருக்கிறாராம் வைகோ!

கடந்த சில வருடங்களாய் தி.மு.க.வுக்கும் வைகோவுக்கும் இடையில் நடந்த யுத்தத்தை தமிழகம் நன்கு அறியும். வைகோ மட்டும் மக்கள் நல கூட்டணி என்றொரு தளத்தை உருவாக்கி வீணாக வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் 2016 சட்டமன்ற தேர்தலை தி.மு.க. வென்றிருக்கும் என்பது அக்கட்சியின் வருத்தக் கணக்கு.

இது போக காவிரி விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட அத்தனையிலும் தி.மு.க.வை கடந்த சில வருடங்களாக வரி வரியாக உரித்தெடுத்து தாக்கினார் வைகோ. இதனாலும் அவர் மேல் அதிகபட்ச காட்டத்தில் இருந்தனர் தி.மு.க.வினர்.

இந்நிலையில் ஜெ., மரணம், அ.தி.மு.க.வின் நிலையற்ற ஆட்சி, பா.ஜ.க.வின் அதிகார தலையீடு என்று தமிழகமே குழம்பிக் கிடக்கும் நிலையில் நோயுற்று இருக்கும் கருணாநிதியை கோபாலபுரம் சென்று சந்தித்து தளுதளுத்துவிட்டு வந்தார் வைகோ. 

இதன் தொடர்ச்சியாக மழையால் ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவள விழா மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திராவிடத்தின் தனித்துவம் குறித்து பொங்கினார் வைகோ.

அந்த முரசொலி மேடையை ஸ்டாலினை முதல்வராக முன்மொழியும் விழாவாக மாற்றினர் கி.வீரமணியும், துரைமுருகனும். இதை வழிமொழிவது போல் அமைந்தது இந்திய கம்யூனிஸ்டின் மாநில செயலாளர் முத்தரசனின் பேச்சு.

ஸ்டாலினை முதல்வராக்கும் பிரகடனத்தை வைகோவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது போல் துரைமுருகன் ஒரு கோரிக்கையை வைத்தார். இறுக்கமாக இருந்த வைகோவின் முகத்தில் எந்த சலனமுமில்லை. 

இந்நிலையில், எதிர் வரும் தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணியில் தாங்கள் (ம.தி.மு.க.) இணையும் முடிவை வைகோ எடுப்பார் போல தெரிகிறது எனும் லெவலில் ம.தி.மு.க.வினரிடையே பரபரப்பு பேச்சு கிளம்பியது.

வைகோ இதை ரசிக்கவுமில்லை, வெறுக்கவுமில்லை. 

இந்நிலையில்தான் வைகோவுக்கு அவரது கழக தொண்டர் ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது என்கிறார்கள். அதில் தி.மு.க.வுடன் அரசியல் நட்பு இனி எந்த சூழலிலும் வேண்டாம் என்று அழுத்தி சொல்லப்பட்டிருக்கிறதாம். 

‘’அண்ணன் கலைஞர் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் இத்தனை ஆண்டுகள், இத்தனை பிரச்னைகளுக்கு பின்னரும் எள்ளளவும் குறையாதிருப்பதை சமீபத்தில் உங்களுடைய கோபாலபுரத்து விசிட் வெளிச்சமிட்டுக் காட்டியது.

தமிழனுக்கே உரிய தனிப்பெரும் அடையாளமான உணர்ச்சிமுகுதல், பேரன்பு கொள்ளுதல் ஆகிய பண்புகளை ஒருங்கே பெற்றிருக்கும் உங்களை தலைவராக கொண்டதில் பெருமைப்படுகிறோம். 

ஆனால் அக்கட்சியுடன் இனி அரசியல் ரீதியிலான நட்பு நமக்கு வேண்டவே வேண்டாம். கோபாலபுரத்துக்கு நீங்கள் சென்றதையும், முரசொலி பவளவிழா மேடையில் முழங்கியதையும்  ‘அன்பினால் போனீர்கள், அழைத்ததால் போனீர்கள்’ என்ற அளவில் எடுத்துக் கொள்கிறோம். வட இந்திய அரசியலில் சோனியாவும், மோடியும் கைகூப்பி கொள்வதும், ஒரே நிகழ்வில் அமர்ந்து தேநீர் அருந்துவதும் இயல்பு.

அப்படியான ஒரு நாகரிகம் உங்கள் மூலமும், திரு.ஸ்டாலின் மூலமும் இங்கே உதயமாகி இருப்பதை வரவேற்கிறோம். ஆனால் இது அரசியலாய் தொடர வேண்டாம். 

இந்த விஷயத்தில் தி.மு.க.வை குறை கூறிட நாங்கள் விரும்பவில்லை.  ஈழ விவகாரத்திலும், காவிரி நீர் பங்கீடு விவகாரத்திலும், ஜல்லிக்கட்டு விவகாரத்திலும், விவசாயிகள் பிரச்னை விவகாரத்திலும் தமிழகத்தின் உரிமை இழப்பு பின்னணியில் தி.மு.க. வின் பழைய ஆட்சி இருந்ததென்பதை மேடைக்கு மேடை வெளுத்துக் கட்டியவர் நீங்கள். மக்கள் அதை உன்னிப்பாக மனதில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க.வுக்கு எதிராக நாமெடுத்த அரசியல் முன்னெடுப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம். இது எல்லாமே மக்களுக்கு அத்துப்படி.

அப்பேர்ப்பட்ட நீங்கள் தி.மு.க.வுடன் கூட்டணி! என்று சொல்லி இனி அவர்களின் மேடையில் நின்று முழங்கினால் மக்கள் நிச்சயம் முகம் சுளிப்பர்.

நாலு பேரை போல் நாமும் சந்தர்ப்பவாத அரசியலை செய்ய வேண்டாம். இதற்கு முன் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு சீட் பிரிப்பு விவகாரத்தில் நாம் பட்ட அவமானங்களின் வடு இன்னமும் மனதிலிருக்கிறது.

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டதன் மூலம் நம் கழகம் பெரு வெற்றி பெற்றாலும் கூட அது நமக்கு தேவையில்லை. காரணம் கையில் எதுவுமே இல்லாத நாம் இனியும் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை.

நூறு வெற்றிகளை பெறாத நாம் ஆயிரம் தோல்விகளுக்குப் பிறகும் நிமிர்ந்து நிற்கிறோமென்றால் அது சுயமரியாதையால்தான்! அந்த சுயத்தை நாம் என்றும் இழக்க வேண்டாம்.

தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வதை விட தனியாகவே நின்று தோற்கலாம் நாம். சிந்தியுங்கள் தலைவரே!” என்று நேர்த்தி, பக்குவம், அனுபவ முதிர்வான வார்த்தைகளை தாங்கி வந்திருக்கும் அந்த கடிதம் வைகோவை மிகப்பெரிய யோசனையில் ஆழ்த்தியிருக்கிறதாம். 

புயல் வீசும் முன் சிந்திக்கட்டும்! 

 

 

tags
click me!