
முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டை வார்த்தை கூட மாறாமல் தினகரனும் முன்வைத்துள்ளார்.
பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும் என அறிவித்த முதல்வர், குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதற்காக 400 கோடி ரூபாயை ஒதுக்கினார்.
ஆனால், கடந்த ஒருவாரமாக கனமழை பெய்துவரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் மட்டுமல்லாது நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மழைநீர் வயலுக்குள் புகுந்து பயிர்கள் மூழ்கியதற்குக் காரணம், வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாதது தான் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். வாய்க்கால்களை தூர்வாரியிருந்தால் தண்ணீர் வயலுக்குள் வந்திருக்காது என்று விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தருமபுரியில் தினகரன் அணி சார்பில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய தினகரன், பழனிசாமி அரசை விமர்சித்து பேசினார்.
அப்போது, நீர்நிலைகளை தூர்வாராமல் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, கஜானாவைத்தான் தூர்வாருவதாக விமர்சித்தார். இதே விமர்சனத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஏற்கனவே முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுகவுடன் தினகரன் சேர்ந்துகொண்டு இரட்டை இலையை கிடைக்க விடாமல் செய்வதாக அமைச்சர்கள் குற்றம்சாட்டிவரும் நிலையில், ஸ்டாலினின் விமர்சனத்தை வார்த்தை மாறாமல் தினகரன் கூறியிருப்பது அமைச்சர்களின் விமர்சனத்துக்கு மேலும் வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது.