
கருணாநிதியை விட ஸ்டாலின்தான் ஆபத்தானவர் என்று பாஜக தலைவர் விமர்சனம் செய்ததுதான் மிகச்சிறந்த பாராட்டு என்று திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் பேசினார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னையில் ரத்ததானம் செய்த 1070 இளைஞர்களுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி பங்கேற்று பேசினார். “தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தால், இந்துக்களுக்கு எதிராக ஆட்சி இருக்கும் என்று பாசிச சக்திகள் பேசினார்கள். ஆனால், சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு திமுக அனைவருக்குமான கட்சி என்பதைப் புரிந்துகொண்டுவிட்டனர். சேகர்பாபு செய்து வரும் செயல்களை மக்கள் அதை உணர்ந்துவிட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி மூலம், திமுக தலைவருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்திருக்கிறது. பிரசாரத்துக்காக பல பகுதிகளுக்கு சென்ற போது பெண்கள், மகளிர் இலவச பேருந்து திட்டத்தை ஸ்டாலின் பஸ் என்றே அழைத்தார்கள். தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியை இந்தியாவே பாராட்டுகிறது. என்றாலும் கருணாநிதியை விட ஸ்டாலின்தான் ஆபத்தானவர் என்று பாஜக தலைவர் விமர்சனம் செய்ததுதான் மிகச்சிறந்த பாராட்டு.” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாதான் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கருணாநிதியைவிட ஆபத்தானவர் என்று விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.