
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்கூல் பையன் போல் சட்டசபையை கட் அடிக்கிறார் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் திமுக வெளிநடப்பு செய்வது பலரிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் திமுக ஆரம்பத்தில் இந்த கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக இருந்தது. திமுகவின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து திமுக தனது முடிவை மாற்றிக்கொண்டது.
இந்நிலையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக அழிந்துவிடும் என திமுகவே நம்புகிறது. தமிழகத்தின் கிழக்கு மாவட்ட மக்கள் கழகங்களுக்கு வாக்களித்துவிட்டு ஏமாந்து நிற்கின்றனர். பள்ளி மாணவர்கள் வகுப்புகளை கட் அடிப்பது போன்று சட்டசபையை முக ஸ்டாலின் கட் அடிக்கிறார். மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துவிட்டது. ஆனால், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு இன்னும் உறுப்பினர் பட்டியலை கூட தாக்கல் செய்யவில்லை.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் புதிய சாலைகள் அமைப்பதற்காக விரைந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் புதிய சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் சென்னை-சேலம் பசுமை வழி திட்டத்திற்கு எதிராக மக்கள் தூண்டிவிடப்பட்டிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் புரளியையும், வதந்திகளையும் பரப்ப நிறைய பேர் இருக்கிறார்கள்.
தவறான பிரச்சாரங்கள் மூலம் எதிர்ப்புகளை தூண்டிவிட்டால் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வராமல் போய்விடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் சாலைப்பணிகளை மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டும். கிழக்கு கடற்கரை பகுதியில் அமையும் ரெயில்பாதை திட்டத்தினை துரிதப்படுத்த வேண்டும். கன்னியாகுமரியில் துறைமுகப் பணிகள் தொடங்க தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.