அழகிரியுடன் கைகோர்க்கும் ஸ்டாலின் அதிருப்தியாளர்கள்! கெத்து காட்ட தயாராகும் துரை தயாநிதி!

By vinoth kumarFirst Published Aug 15, 2018, 11:38 AM IST
Highlights

தி.மு.கவில் ஸ்டாலினால் ஓரம் கட்டப்பட்ட பழைய நிர்வாகிகள் பலரும் மு.க.அழகிரிக்கு ஆதரவாக செயல்பட திட்டமிட்டு அதற்கான வேலையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.கவில் கலைஞர் மட்டுமே அதிகார மையமாக இருந்த காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குடும்பம் கோலோச்சி வந்தது.

தி.மு.கவில் ஸ்டாலினால் ஓரம் கட்டப்பட்ட பழைய நிர்வாகிகள் பலரும் மு.க.அழகிரிக்கு ஆதரவாக செயல்பட திட்டமிட்டு அதற்கான வேலையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.கவில் கலைஞர் மட்டுமே அதிகார மையமாக இருந்த காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குடும்பம் கோலோச்சி வந்தது. ஆனால் ஸ்டாலின் அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்த முறையை ஒழித்தார். உதாரணமாக தஞ்சையில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை இருக்கும் இடம் தெரியாமல் ஒழித்துவிட்டார்கள். இதே போல் சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும் எந்த பொறுப்பும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார். 

ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் ஸ்டாலின் வருகைக்கு பிறகு புதிய நிர்வாகிகள் அதிகாரத்திற்கு வந்தனர். பழையை நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கும் செல்லாமல், தி.மு.கவிலும் ஆக்டிவாக இல்லை. தற்போது அழகிரி ஸ்டாலினுக்கு எதிராக களம் இறங்கியுள்ள நிலையில் அவருடன் இணைந்து செயல்படலாமா என்று யோசிக்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் ஸ்டாலினால் அவமானப்படுத்தப்பட்டதாக கருதப்படும் சில மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அழகிரியுடன் இணைந்து குடைசல் கொடுக்கலாம் என்று கருதுவதாக சொல்லப்படுகிறது. 

இப்படி ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், ஸ்டாலினால் பதவி பறிப்புக்கு ஆளானவர்களை அழகிரி மகன் துரை தயாநிதி தொடர்பு கொண்டு பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது எந்த நம்பிக்கையில் நாங்கள் அழகிரி பின்னால் வருவது? எங்கள் எதிர்காலத்திற்கு என்ன உத்தரவாதம் என்று அவர்கள் கேட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு நிச்சயமாக தி.மு.கவில் நாங்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவோம், அதில் எந்த மாற்றமும் இல்லை. அதனை போகப் போகத்தான் நீங்கள் பார்ப்பீர்கள் என்று துரை தயாநிதி பூடாகமாக மட்டும் பேசியதாக கூறப்படுகிறது.

துரை தயாநிதியின் இந்த பேச்சில் தி.மு.க பழைய நிர்வாகிகள் யாரும் ஈர்க்கப்படவில்லை என்றாலும் தொடர்ந்து அவருடன் தொடர்பிலேயே இருக்கின்றனர். அழகிரி ஏதாவது செய்து பரபரப்பு ஏற்படும் போது அவருடன் கை கோர்த்துவிடலாம் என்று அவர்கள் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் புதிய கட்சி எல்லாம் எதுவும் ஆரம்பிக்கும் யோசனை அழகிரிக்கு இல்லை என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.  ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து தி.மு.கவில் உயர் பதவியை தனது மகனுக்கு பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்பது தான் அழகிரியின் பிளானாக இருக்கிறது.

 

 இதற்காக முதல்கட்டமாக திருப்பரங்குன்றத்தில் தனது மகன் துரை தயாநிதியை வேட்பாளராக நிறுத்தலாமா என்கிற யோசனையில் கூட அழகிரி இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க வேட்பாளரை விட திருப்பரங்குன்றத்தில் அதிக ஓட்டுகள் வாங்கினால் போதும் ஸ்டாலினுக்கு நெருக்கடியை அதிகமாக்க முடியும் என்று அழகிரி யோசிக்கிறார். மேலும் தென்மாவட்டங்களை பொறுத்தவரை தி.மு.க என்றால் அது தான் தான் என்பதை திருப்பரங்குன்றம் தேர்தல் மூலமாக நிரூபிக்க முடியும் என்றும் அழகிரி நம்புகிறார். இதனை ஒட்டியே அவரது மகன் துரை தயாநிதியும் தந்தைக்கு தேவையான வகையில் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.

click me!