
ஜெயலலிதாவின் மரணத்தைப் போல் கொடநாடு காவலாளி கொலையும் மர்மமாக இருந்து விடக்கூடாது என்றும், உரிய விசாரணை நடத்தி யார் கொலையாளி? என்ற உண்மையை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொட நாடு எஸ்டேட் காவலாளி ஓம் பாதுதூர் சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே இந்த தொலை தொடர்பாக கேரளாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் சசிகலா குடும்பத்தினரிடமும் இந்த கொலை குறித்து விசாரணை நடத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது ஓய்வெடுக்க செல்லும் கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். இன்னொரு காவலாளி காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறும் நேரத்தில் காவலாளி கொலையும் மர்மமாக இருந்து விடக்கூடாது என தெரிவித்தார். . காவலாளி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.