
தமிழகத்தில் பாஜக கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் குழப்பங்களும் மாற்றங்களும் நீடிக்கிறது. கட்சியில் மட்டுமல்ல; ஆட்சியிலும் அதேநிலைதான் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையை சாதகமாக்கிக்கொண்டு மாநில அரசை கைப்பாவையாக பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் காலூன்ற முயல்வதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழகத்தின் தற்காலிக ஆளுநராக இருந்த வித்யாசாகரின் செயல்பாடுகளும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வது போன்றே இருந்தன.
முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ், சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வருமான வரித்துறையை ஏவிவிட்டு அதன்மூலம் ஆட்சியாளர்களை அச்சுறுத்தி, மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் மாநில அரசை வைத்துள்ளதாகவும் மாநில அரசை மத்திய பாஜக அரசு தான் இயக்குவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் திமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்குப் பிறகு அதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.