
ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று; குற்றவாளிகள் நாடாளக் கூடாது என்று கமல் டுவிட்டரில் பதிவிட்டதற்கு தற்போது மன்னராட்சியா நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் கமல் ஹாசன் தீவிர அரசியல் ஈடுபட போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. டுவிட்டர் பக்கம் மூலம் கமல் ஹாசன், அரசியல் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். கமலின் டுவிட்டர் பதிவு காரணமாக பல்வேறு சர்ச்சைகளுக்கும் அவர் ஆளாகி வருகிறார்.
இந்த நிலையில், கமல் நேற்று டுவிட்டரில், ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக் கூடாது. மக்கள் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆக வேண்டும். மக்களே நடுவராக வேடும். விழித்தெழுவோம் தயவாய் என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
கமலின் டுவிட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை, பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டலாம். ஆனால் கற்பனையான குற்றச்சாட்டு எனில் கமல் ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று கூறினார்.
நடிகர் கமல் மீது கடுமையாக விமர்சனம் செய்த அமைச்சர் ஜெயக்குமார், கமலின் டுவிட்டர் பதிவை குறிப்பிட்டு பேசினார். அதாவது ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று குற்றவாளிகள் நாடாளக் கூடாது என்று கமல் பதிவிட்டிருந்ததற்கு, அமைச்சர் ஜெயக்குமார், ஆராய்ச்சி மணி அடிக்கக் கூறுவதற்கு தற்போது என்ன மன்னராட்சியா நடைபெறுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
மழை பெய்தால் எப்படி நரியின் சாயம் வெளுத்து விடுமோ அதுபோல இவருடைய சாயமும் வெளுத்துவிடும் என்றும் கட்சியை ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு தொண்டர்களிடம் ரூ.30 கோடி கேட்ட ஒரே ஆள் இவர்தான் என்றும் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்தார்.
கடந்த காலத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் கல்யாணகுமார் கதாப்பாத்திரம்போல் கமலின் கேரக்டர் இருப்பதாகவும், நிகழ்காலத்தில் குணா கமல் கேரக்டர் ஞாபகப்படுத்துவதாகவும் கூறினார். மேலும் கமல் கற்பனை உலகில் சங்சரித்துக் கொண்டு இருப்பதாகவும் ஜெயக்குமார் கூறினார்.