
பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்ததாக தான் கூறியது உண்மையாகிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மார்தட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் சசிகலாவின் ஆதிக்கத்தை எதிர்த்து ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணி தனியாக செயல்பட்டது. பின்னர் பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் பலகட்ட பேச்சுவார்த்தை மற்றும் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒன்றாக இணைந்தது.
இரு அணிகள் இணைவின் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டி வந்தனர்.
அந்த குற்றச்சாட்டிற்கு எல்லாம் இதுவரை மறுப்பு தெரிவித்து வந்த பன்னீர்செல்வம், அவர் வாயாலேயே பிரதமர் மோடிதான் அணிகளை இணைத்து வைத்தார் என்பதை அண்மையில் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் நடந்த சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் பேசிய ஸ்டாலின், பிரதமர் மோடி கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக பன்னீர்செல்வமே கூறியிருக்கிறார். இதன்மூலம், மோடி கட்டப்பஞ்சாயத்து செய்தார் என நான் கூறியது உண்மையாகிவிட்டது என ஸ்டாலின் தெரிவித்தார்.