வேலூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 3 நாள் பிரச்சாரம் ! திமுக அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Jul 25, 2019, 8:10 PM IST
Highlights

ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின்  வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலுக்காக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நாளில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். 
 

பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறவிருந்த வேலூர் மக்களவை தேர்தல் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதனையடுத்து, வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நாளில் வேலூரில் பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.  

அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி வரும் 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2-ம் தேதி முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

இதே போல் திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், 27 ஆம் தேதி கே.வி.குப்பம் தொகுதியிலும், 28 ஆம் தேதி வாணியம்பாடி தொகுதியிலும், 29 ஆம் தேதி அணைக்கட்டு தொகுதியிலும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

click me!