கமிஷனுக்காவே உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போடுகிறார் ! வேலுமணிக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்....

By Selvanayagam PFirst Published May 4, 2019, 8:41 PM IST
Highlights

தமிழக அரசின் டெண்டர்களில் "கமிஷனை" ஒட்டுமொத்தமாக குத்தகை எடுக்கும் உள்நோக்கத்துடன் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை திட்டமிட்டு தடுத்து வருகிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவைத் தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்று புதிய காரணங்களைக் கண்டுபிடித்து, தமிழகத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத சூழல் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறி கங்கணம் கட்டிக் கொண்டு பதில் மனுக்களைத் தாக்கல் செய்து- கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ளாட்சி ஜனநாயகத்தை அடியோடு பாழ்படுத்தி விட்டார்கள்.

அதிமுக அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கு தமிழகத்தில் ஒரு தனி மாநில தேர்தல் ஆணையம் தேவையா என்ற முக்கியமான கேள்வியே எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இப்போது மே 31  காலக்கெடு வருகின்ற நேரத்தில் “வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்” என்று புதிய காரணத்தைச் சொல்லி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் கோரியுள்ளது. 

அதிமுக அரசோ இப்போதுள்ள சூழலில் தேர்தலை நடத்தவே முடியாது என்று கை விரித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறி பதில் மனுக்களைத் தாக்கல் செய்து ஒரு சிறுபிள்ளத்தனமான விளையாட்டை நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்..

அடிப்படை பிரச்னைகளை தீர்க்க மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல்- திடீர் பேரிடர்கள், வறட்சிகள் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற உள்ளாட்சி நிர்வாகம் மிக முக்கியமானது.  ஆனால் டெண்டர்களில் "கமிஷனை" ஒட்டுமொத்தமாக குத்தகை எடுக்கும் உள் நோக்கத்துடன் தான் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தேர்தல் நடத்தப்படுவதை திட்டமிட்டு தடுத்து வருகிறார். 

ஆகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் அதிமுக அரசு தொடர்ந்து நடத்தி வரும் “ஒத்துழையாமை இயக்கத்தை” மாநில தேர்தல் ஆணையர் தானாகவே முன் வந்து உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தெரிவித்து உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

click me!