
இது 15 ஆவது நாடாளுமன்றம். ஆனால், இதுவரை ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்கள் அதிகம் பேர். இரு முறை அமைச்சர்களாக இருந்தவர்களும் உண்டு. இப்போது ரயில்வே அமைச்சகத்தின் 39 ஆவது அமைச்சராகப் பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார் பியூஷ் கோயல்.
ஆனால், அவர் ரயில்வே அமைச்சகமான ரயில் பவன் பக்கமே வருவதில்லை. காரணம் என்ன?
1946ல் அமைந்த தாற்காலிக அமைச்சரவையில் முதல் ரயில்வே அமைச்சராக இருந்தவர் ஆசாஃப் அலி. பின்னர், நாடு சுதந்திரம் அமைந்த பின், சுதந்திர இந்தியாவின் முதல் ரயில்வே அமைச்சராக இருந்தவர் ஜான் மாத்தாய். அவர் ஒருவருடம்தான் அமைச்சராக இருந்தார். பின்னர் என்.கோபாலஸ்வாமி ஐயங்கார் 48 முதல் 52 வரை அமைச்சரானார். 52ல் லால் பகதூர் சாஸ்திரி அமைச்சராக இருந்தார்.
அந்தக் காலக் கட்டத்தில் 56ல் இருந்து 63 வரை நீண்ட காலம் ரயில்வே அமைச்சராக இருந்தவர் ஜெகஜீவன் ராம். அமைச்சராக, தனது அமைச்சரவையில் முழு காலத்தையும் நிறைவு செய்தார். பின்னாளில் ஸ்வரன் சிங், தாசப்பா, எஸ்.கே.பாடீல், சி.எம். பூனாசா, ராம் சுபா சிங், பனம்பிள்ளி கோவிந்த மேனன், குல்சாரி லால் நந்தா, ஹனுமந்தராயா, டி.ஏ.பை லலித் நாராயன் மிஸ்ரா, கமலபதி திரிபாதி, மது தாண்டவதே, என அனைவருமே ஒரு வருடம், இரு வருடங்களில் அமைச்சர் பொறுப்புகளில் இருந்துவிட்டு, விலகினர் அல்லது அமைச்சரவை மாறியது.
80களில் கேதார் பாண்டே, ப்ரகாஷ் சந்த்ர சேதி, கனிகான் சௌத்ரி, பன்சி லால், மோஷினா கித்வாய், மாதவராவ் சிந்தியா என அமைச்சர் பட்டியல் குறுகிய காலத்துக்குள் இருத்திக் கொண்டது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ், 89ல் இருந்து 90 டிசம்பர் வரை ஒரு வருடமே இருந்தார். ஞானேஸ்வர் மிஸ்ரா மூன்று மாதமே இருந்தார். பின்னர் வந்த ஜாபர் ஷெரீப், நான்கு வருடங்கள் அமைச்சரவையின் மீத நாட்களில் பொறுப்பில் இருந்தார்.
பின்னாளில் கூட்டணியில் இருப்பவர்கள் ரயில்வே அமைச்சர்களாக இருந்தார்கள். ராம் விலாஸ் பாஸ்வான் 96லும், நிதிஷ் குமார் 98லும் வந்தார்கள். பின் ராம் நாயக் 99ல் வந்தார் என்றாலும் மூன்றே மாதம்தான்... தொடர்ந்து மம்தா பானர்ஜி பொறுப்பேற்று 2 வருடம் இருந்தார். பின் நிதிஷ்குமார், மீண்டும்! அவரைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ், 2004ல் பொறுப்பேற்றார். அவர் முழுக் காலமும் அமைச்சரவையில் நிறைவு செய்தார். பின்னர் 2009ல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி பொறுப்பேற்றார். தொடர்ந்து மாநில அரசியலுக்கு திரும்பிய மம்தா, தினேஷ் திரிவேதி, முகுல் ராய் என தன் கட்சி நபர்களை அதில் அமர்த்தினார்.
தொடர்ந்து சிபி ஜோஷி, பவன்குமார் பன்சால், மல்லிகார்ஜுன கார்கே என காங்கிரஸ் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சர் மட்டும் மாறிக் கொண்டே இருந்தனர். தொடர்ந்து வந்த பாஜக ஆட்சியில் முதலில் சதானந்த கவுடா 2014ல் பொறுப்பேற்றார். ஆறு மாதமே அவர் பொறுப்பு. தொடர்ந்து சுரேஷ் பிரபு பொறுப்பேற்றார். அவரும் தொடர்ச்சியான ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று இந்த வருடம் செப்டம்பர் 3 ஆம் தேதி ராஜினாமா செய்ய, அன்றில் இருந்து நிலக்கரித்துறைக்கும் அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயல் ரயில்வே அமைச்சகத்தின் பொறுப்பில் இருந்து வருகிறார்.
ஆனாலும்... ரயில்வே அமைச்சகத்தின் பக்கம் எட்டிப் பார்த்து, ரயில் பவனில் அமர்ந்து வேலை செய்ய அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. காரணம் வாஸ்துவாம். இப்போதும், தான் ரயில்வே துறைக்கும் அமைச்சராக இருந்தாலும், பரோடா ஹவுஸில் இருந்து கொண்டுதான் ரயில்வே அமைச்சகம் தொடர்பான ஃபைல்களைப் பார்க்கிறார் பியூஷ் கோயல். பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்த மட்டுமே அவர் ரயில் பவன் பக்கம் வருகிறாராம்.
மக்களவை என்னவோ 15 தான் என்றாலும், 39 அமைச்சர்களைக் கண்டுவிட்ட ரயில் பவனில் இதுவரை தங்களது முழு 5 வருட காலமும் அமைச்சரவையில் இருந்து காலத்தைக் கழித்தவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். அவர்கள்தான் ஜெகஜீவன் ராமும், லாலு பிரசாத் யாதவும். மற்றவர்கள் எல்லோருமே, ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்றோ அல்லது, மக்களவை காலம் முடிந்தோ பதவியில் இருந்து இறங்கியிருக்கிறார்கள்.
எனவேதான் ரயில்வே அமைச்சகம் என்றாலே பொறுப்புக்கு வருபவர்கள் அஞ்சுகிறார்கள் என்கிறார்கள். இப்போதும் அதற்குக் காரணமாகக் கூறப்படுவது, ரயில் பவன் வாஸ்து என்கிறார்கள்... வாஸ்தவமாகவே வாஸ்துதான் காரணமா?