
கமலின் செயல்பாடுகள் அவர் நேரடி அரசியலுக்கு வரப்போவதை உறுதிப்படுத்துகின்றன.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக அரசை நேரடியாகவே கடுமையாக விமர்சித்து வருகிறார் கமல்.
ஆளும் அதிமுக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு, நிர்வாகத் திறமையின்மை என பல்வேறு குற்றச்சாட்டுகளை டுவிட்டரில் மட்டுமே முன்வைத்து வந்தார். கமல் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்வார் என அமைச்சர்கள் அவரை விமர்சித்துவந்தனர்.
இந்நிலையில், மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் இறங்கியும் பணியாற்றுவேன் என்பதை நிரூபிக்கும் விதமாக எண்ணூர் கழிமுக பகுதியில் கொசஸ்தலையாற்றில், அனல் மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் தெரிவித்ததோடு நேரில் சென்றும் பார்வையிட்டார்.
அதன்பின்னர், இன்று விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். விவசாயிகளின் அடிப்படை பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தான் அரசியலுக்கு வரப்போவதை உறுதிப்படுத்தும் விதமாக களத்திலும் இறங்கிவிட்டார் கமல்.
இந்நிலையில், கமலின் அரசியல் பிரவேசம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
கமலை, ஷங்கரால் மட்டுமே முதல்வராக்க முடியும் என செல்லூர் ராஜூ கிண்டலாக தெரிவித்துள்ளார். கமல் படத்தில் மட்டும்தான் முதல்வராக முடியும் என கிண்டலடித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் அர்ஜூனை ஒருநாள் முதல்வராக காட்டியிருப்பார். அந்த திரைப்படத்தை கருத்தில்கொண்டு கமலை ஷங்கரால் மட்டும்தான் முதல்வராக்க முடியும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் செய்துள்ளார்.