
கமல் ரசிகர்கள் சிலர் இணையதளத்தில் எழுதியிருப்பதை பார்த்து அதிர்வதா! அல்லது ஆமோதிப்பதா என்று புரியவில்லை...!
அரசியலை தொட்டுவிடும் தூரத்தில் நெருங்கிவிட்டார் கமல். அரசியல்வாதி அடவு கட்டப்போகும் தன்னை பொது மக்கள் மத்தியில் சந்தைப்படுத்த மிகச் சிறப்பாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கையாண்டிருந்த கமல், அதன் நிறைவு நாள் நிகழ்வில் அந்த உத்தியின் உச்சத்தை தொட்டார்.
ஆம்! இயக்குநர் ஷங்கரை அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்த கமல், ஊழலுக்கு சுளுக்கெடுத்த தனது ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதை ஷங்கர் மூலமாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது.
இந்நிலையில், நேற்று கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர் 4வது தெருவில் சேதமடைந்து மழை நீரில் மூழிகியிருந்த மின்விநியோக பெட்டியிலிருந்து தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதையறியாமல் பாவனா எனும் ஏழு வயது சிறுமியும், யுவஸ்ரீ எனும் ஒன்பது வயது சிறுமியும் மின்சாரம் தாக்கி இறந்தனர். இந்த தகவல் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சிறுமிகளை காவு வாங்கிய பெட்டிக்கான மின்சப்ளை நிறுத்தப்பட்டது. ஆனால் சம்பவ இடத்திற்கு மின்சார துறை ஊழியர்கள் யாரும் வரவில்லையாம். இது பொதுமக்களை அரசுக்கு எதிராக பொங்க வைத்தது.
இந்த இறப்பு சம்பவம் நிகழ்ந்த கொஞ்ச நேரத்திலேயே கமல்ஹாசன் தனது ட்விட்டரில் ‘வெறும் நிதியுதவி மட்டும் போதாது. இனி இப்படி உயிரிழப்பு நிகழா வண்ணம் ஆவன செய்ய வேண்டும்.’ என்று ட்விட்டி அரசின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இந்நிலையில் கமலின் ரசிகர்கள் சிலர் தங்கள் முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் “ஷங்கரோட அந்நியன் படத்துல சின்ன வயசு அம்பியோட தங்கச்சி இப்படித்தான் மழை தண்ணியில மின்சார வொயர் அறுந்து கிடந்து மின்சாரம் பாய்ஞ்சு அதுல சிக்கி இறக்கும். அறுந்து கிடந்த கம்பியை உடனடியா மின்வாரிய ஊழியர் சரி செஞ்சிருந்தா இந்த துக்கம் நிகழ்ந்திருக்காதுன்னு ஷங்கர் காண்பிச்சிருப்பார்.
இப்போ கொடுங்கையூர்ல அதே கொடுமைதான் யதார்த்தமா நடந்திருக்குது. இந்த பிரச்னைக்கு தலைவர் கமல் குரல் கொடுத்திருக்கார்.
ஷங்கரோட தீர்க்க தரிசனமும், தலைவர் கமலோட தைரிய குரலும் ஒண்ணா சேருது.
ஏற்கனவே இந்தியன்ல லஞ்சப்பேய்களோட தலைமுடியை பிடிச்சு ஆட்டுன இந்த ரெண்டு பேரும் கூடிய சீக்கிரம் இந்தியன் 2 ஆரம்பிக்கிறாங்க. இந்தவாட்டி பணம் தின்னி பேய்களை கருவறுக்கமா விடமாட்டாங்க.
இந்தியன் 2 சுடச்சுட ரிலீஸாகுறப்ப தலைவர் கமல் தமிழக முதல்வரா இருந்தாலும் ஆச்சரியமில்லை!” என்று வரிந்து வரிந்து எழுதி தள்ளியிருக்கின்றனர்.
இதைப் படித்துவிட்டுதான் ‘இவனுங்க நல்லவனுங்களா? இல்ல பில்ட் அப் பேர்வழிங்களா!’ என்று மண்டைகாய்கிறார்கள் இணைய தமிழர்கள்.