
பதவி, அதிகாரம், கமிஷன் என்று எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் எடப்பாடி அணியை தழுவவில்லை கணிசமான எம்.எல்.ஏ.க்கள். ஒரு வேளை ஓ.பி.எஸ். அணியும், ஈ.பி.எஸ். அணியும் ஒன்றிணைந்தால் பதவிகள் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தும் கூட ஓ.பி.எஸ். அணியையும் தழுவவில்லை சில எம்.எல்.ஏ.க்கள். மாறாக திகாருக்கு போய் திரும்பிய, கட்சியிலிருந்து ஓரங்கப்பட்டப்பட்டிருக்கின்ற, இன்னும் அறுபது நாட்களுக்கு தீவிர அரசியல் பக்கமே தலையிடமாட்டேன் என்று அறிவித்திருக்கும் தினகரன் பக்கம் போய் நிற்கிறார்கள்! இது ஒரு ஆச்சரிய அரசியல்தான்.
தினகரனை நாடி நிற்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்பார்ப்புகள், விசுவாசங்கள், நன்றிகள், எதிர்கால கணக்குகள் என்று ஏகப்பட்ட கமிட்மெண்டுகள் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்குள் ஒரேயொரு மனிதர் மட்டும் வித்தியாசப்பட்டு நிற்கிறார். அவர்தான் செந்தில் பாலாஜி. ஆளாளுக்கு ஆயிரத்தெட்டு ஃபீலிங்ஸ் என்றால் அவருக்கு ஒரேயோரு ஃபீலிங் அதுவும் ஓவர் ஃபீலிங்கி.
யெஸ்! போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மினிஸ்ட்ரியிலிருந்து தூக்க வேண்டும். இது மட்டுமே அவரது கமிட்மெண்ட். இதற்காகத்தான் தினகரன் இருக்கும் திசையெங்கும் தென்படுகிறார்.
அப்படியென்ன பாலாஜிக்கும், பாஸ்கருக்கும் வாய்க்கா தகராறு?...எதுவுமே கிடையாது. நீங்கள் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்தவர், அடுத்த படத்தில் மாஸ் ஹீரோவாகிவிட அதே படத்தில் சைடு ஆக்டராக உங்களை புக் செய்தால் ஆத்திரம் எப்படி தலைக்கேறும்? அதுதான் செந்தில் பாலாஜியின் பிரச்னையே.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த செந்தில் பாலாஜியை போக்குவரத்து துறை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. கழக ஆட்சியில் கே.ஏ. செங்கோட்டையன் கோலோச்சிய சூப்பர் டூப்பர் துறை இது. இவ்வளவு பெரிய போர்ட்பொலியோவை புதியவரான செந்தில் தாங்குவாரா? என்று டவுட்டடித்தனர் சீனியர் நிர்வாகிகளும், அதிகாரிகளும். ஆனால் அத்தனை பேரின் சந்தேகங்களையும் தூள் தூளாக்கினார் செந்தில் பாலாஜி.
துறையில் எந்த புதுமையையும், புரட்சியையும் செய்துவிட்டவில்லை. ஸ்மால் பஸ் எனும் ஒன்றை கொண்டு வந்து அதன் பாடியில் ரெட்டை இலை டிஸைனை போட்டதும், பேருந்து நிலையங்களில் பத்து ரூபாய்க்கு அம்மா வாட்டர் பாட்டிலை கொண்டு வந்ததும்தான் இவரது சாதனை. இதற்கே புளங்காகிதமடைந்துவிட்டார் ஜெயலலிதா. கோட்டையில் மட்டுமல்ல கரூரிலும் செந்தில் பாலாஜியின் கொடிதான் பட்டொளி வீசி பறந்தது.
மிக கடுமையான சர்ச்சைகளில் சிக்கிய போதும் கூட மிக மிக லாவகமாக அதிலிருந்து மீண்டார். அதுவும் முழுமையாக தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாக அதிகாரிகளே மலைத்துப் பேசினர்.
செந்தில் பாலாஜியின் வளர்ச்சியையும், வேகத்தையும் கண்டு சீனியர் அமைச்சர்களே மிரட்சி காட்டினர். இப்படி செந்தில் சொல்லி சொல்லி அடித்துக் கொண்டிருந்தபோது கரூரில் கழக சார்பு அணியின் நிர்வாக பொறுப்பில் உட்கார்ந்திருந்தவர்தான் எம்.ஆர். விஜயபாஸ்கர். செந்தில் பாலாஜியை மலைப்பாக பார்த்து மிரண்டவர்களில் இவரும் ஒருவர்.
ஆட்சி அதிகாரமெங்கும் ஆக்டோபஸ் கரங்களாய் பரவி விரவிய செந்தில்பாலாஜியின் ஆளுமைகள் அதையும் தாண்டி சில அதிகார மையங்களோடும் நட்புறவை பாராட்ட துவங்கின. ஆனால் அது அவருக்கு பஞ்சாயத்தைத்தான் கொண்டு வந்து சேர்த்தது. ஜெயலலிதா மற்றும் சசியின் கோபத்துக்கு ஆளானவர் ஒடுக்கி ஓரங்கட்டப்பட்டார். பாலாஜியின் உள் அரசியலால் தலைமையிடம் வாங்கிக் கட்டியிருந்த பணிவான சீனியர் சிலர் இந்த சமயத்தை பயன்படுத்தி அவரைப் பற்றி பக்கம் பக்கமாக தாக்கீதுகளை மேலே அனுப்பினர்.
இதற்குள் அடுத்த தேர்தலே வந்தது! பாலாஜியின் அதீத வளர்ச்சியால் கரூர் மற்றும் தமிழக தலைநகரில் அநியாயத்துக்கு பாதிப்பை சந்தித்திருந்த தம்பிதுரை போன்றவர்கள் செய்த லாபியால் கரூர் தொகுதியில் பாலாஜிக்கு கல்தா கொடுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை நிறுத்தியது தலைமை. அதிர்ந்த செந்திலை அரவக்குறிச்சி தொகுதிக்கு அனுப்பினார்கள்.
கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தோற்கடித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டது அ.தி.மு.க. டீம் ஒன்று. ஆனாலும் ஜெயித்தார் எம்.ஆர்.வி. அரவக்குறிச்சியிலோ தேர்தல் ரத்தானது. செந்திலுக்கு அடிமேல் அடி. ஏற்கனவே நொந்து கிடந்தவரை, விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவி வழங்கி மேலும் நோகடித்தது தலைமை. அதுவும், கடந்த முறை செந்தில்பாலாஜி கோலோச்சிய அதே போக்குவரத்து துறை.
இதைத்தான் செந்தில்பாலாஜியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அரவக்குறிச்சி இடை தேர்தலில் ஜெயித்து வந்தவர் எப்படியாவது அமைச்சராகிட முயன்றார். ஆனால் அதற்குள் ஜெயலலிதாவின் மரணமும், கட்சியிலேற்பட்ட பிளவுகளும் தொடர் முட்டுக்கட்டைகளாய் விழுந்து அமுக்கின.
எடப்பாடி தரப்பிடம் எவ்வளவோ முட்டி மோதியும் அமைச்சர் பதவி வாங்கிட முடியவில்லை செந்திலால். காரணம் இவரது தசாவதாரத்தை கடந்த ஆட்சியிலேயே பார்த்து வைத்திருக்கிருந்தவர்கள் அவர்கள். இதனால் கரூரில் துவக்கப்படாத மருத்துவ கல்லூரியை உடனே ஆரம்பிக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் அறிவித்தார். அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுக்கு கரூர் பற்றி என்ன கவலை? என்று விமர்சனங்கள் வெடித்து அவரை காலி செய்தன. செந்தில்பாலாஜி வெற்று அரசியல் செய்கிறார் என்று வெளிப்படையாகவே பேட்டி தட்டி அவரை காண்டாக்கினார் விஜயபாஸ்கர். போக்குவரத்து துறை ஸ்டிரைக்கு பின்னணியில் கூட செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருப்பதாக எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கோஷ்டி கொந்தளித்தது தனிக்கதை.
வெறுத்துப்போன செந்திலுக்கு பன்னீரின் அணிக்கு போவதில் துளியும் விருப்பமில்லை. காரணம் இருவருக்கும் ஏழாம் பொருத்தம். அவரும் இவரை ஏற்கமாட்டார்.
இந்த சூழலில்தான் தினகரனின் எழுச்சி செந்தில்பாலாஜியை சுறுசுறுப்பாக்கி இருக்கிறது. அதிலும் திகார் சிறைவாசத்துக்கு பிறகும் கூட தினகரனின் மதிப்பு எகிறி இருக்கும் நிலையில் தனது முழு சப்போர்ட்டையும் தினகரனுக்கு அள்ளி தந்திருக்கும் செந்தில் பாலாஜி இன்னும் பல வகைகளிலும் தோள் கொடுத்து தாங்குவதாக செய்தி.
இதற்கெல்லாம் பிரதிபலனாக அவர் தினகரனிடம் கேட்பது ஒரேயொரு கோரிக்கைதான். அது....எம்.ஆர்.விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து தூக்க வேண்டும்! என்பது மட்டுமே.
தனக்கு ஒரு கண்ணு போனாலும், எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும் அது தான் கான்செப்ட்...