சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி... மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவு..!

By Asianet TamilFirst Published May 9, 2021, 9:44 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  
 

எந்த ஆட்சியாக இருந்தாலும் திருநெல்வேலி மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கும். 2006-இல் கருணாநிதி அமைச்சரவையில் மைதீன்கான், பூங்கோதை; 1996-இல் ஆலடி அருணா என இந்த மாவட்டத்திலிருந்து அமைச்சர்கள் இடம் பெற்றனர். இதேபோல எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமைச்சரவையிலும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில்கூட ராஜலட்சுமி ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தார்.
ஆனால், மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் நெல்லை மாவட்டத்திலிருந்து யாரும் அமைச்சராக அறிவிக்கப்படவில்லை. திரு நெல்வேலியில் உள்ள 5 தொகுதிகளில் திமுக கூட்டணி 3 தொகுதிகளில் வென்றது. ராதாபுரத்தில் அப்பாவு, பாளையம்கோட்டையில் அப்துல் வஹாப் ஆகியோர் வென்றனர், இவர்களில் ஒருவருக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவருக்குமே வாய்ப்பு கிடைக்கவில்லை. 
அதேவேளையில் கடந்த 2006-இல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆவுடையப்பன் சபாநாயகராகப் பதவியேற்றார். தற்போது நெல்லைக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில் அப்பாவு சபாநாயகராக ஆவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அப்பாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் மாவட்ட திமுகவில் மூத்த தலைவராக உள்ள அப்பாவு, காங்கிரஸ், தமாகா ஆகிய கட்சிகளில் இருந்தவர், 1996-இல் ராதாபுரம் தொகுதியில் தமாகா சார்பிலும், 2001-இல் சுயேட்சையாகவும், 2006-இல் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
2016-இல் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பசேகரனிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு தோல்வியடைந்தார். இதை எதிர்த்து அப்பாவு நடத்திய சட்டப் போராட்டம் உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. தற்போது ராதாபுரம் தொகுதியிலிருந்து அப்பாவு மீண்டும் தேர்வானது குறிப்பிடத்தக்கது.
இதேபோல துணை சபாநாயகராக, தற்போது தற்காலிக சபாநயாகராக நியமிக்கப்பட்டுள்ள கு.பிச்சாண்டி நியமிக்கப்படுவார் என்றும் திமுகவில் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்துக்கு எ.வ.வேலு அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், கு.பிச்சாண்டியால் அமைச்சராக முடியவில்லை. இந்நிலையில் அவர் துணை சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கு.பிச்சாண்டி 1989, 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் திருவண்ணாமலை தொகுதியிலும் 2016, 2021-இல் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியிலும் கு.பிச்சாண்டி திமுக சார்பில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!