
“அதிமுகவை அழிக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த இயக்கத்தின் வளர்ச்சியை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என அதிமுக கொறாடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக அசாத்திய வெற்றி பெற்றது. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் இது திமுகவுக்கு உறுத்தலாகவே அமைந்து விட்டது. அத்தோடு பாஜகவும் கோவையை குறி வைத்து அங்கு முக்கியஸ்தர்களை களமிறக்கி இருக்கிறது. அதிமுகவின் செல்வாக்கை உடைதெறிய வேண்டும் என திட்டமிட்டுள்ள மு.க.ஸ்டாலின் அந்தப்பகுதி பொருப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை களமிறக்கி இருக்கிறார். அடுத்து மக்கள் நீதி மய்யத்தில் இருந்த டாக்டர் மகேந்திரனை திமுகவிற்கு அழைத்து வந்தனர். அங்கு அதிமுகவுக்கு எதிராக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜி வருகையால் அதிமுக உச்சகட்ட அலர்ட்டில் இருக்கிறது. சிறிய வாய்ப்புகூட கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். சமீபத்தில் செந்தில் பாலாஜியும், எஸ்.பி.வேலுமணியும் ஒரே விமானத்தில் பயணித்து இருக்கின்றனர். வேலுமணி உடனடியாகத் தனது ஆதரவாளர்களுக்கு போன் போட்டு ஏராமானோரை வர வைத்து விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க வைத்து அதகளப்படுத்தி இருக்கிறார்.
கோவையில் தி.மு.க., வேரூன்ற கூடாது என்று அ.தி.மு.க., தரப்பும் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள். நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை கொங்கு மண்டலத்தில் ஸ்ட்ராங்காக்க வேண்டும் என துடிக்கிறது திமுக.
இந்நிலையில், கோவை மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி பீளமேடு பகுதியில் உள்ள ஒரு வில்லாவில் குடியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் கட்சி பணிகளை விரைந்து உடனுக்குடன் முடிக்கவும், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் கோவையிலேயே திமுக அமைச்சர் குடியேறிவிட்டாராம். இது எஸ்.பி.வேலுமணி தரப்பை மேலும் அலர்ட்டாக்கி இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, தங்களுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி. அதிமுக அவ்வளவுதான் என்கிற ரேஞ்சில் செயல்பட்டு வருவதும் அதிமுகவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு செல்ல பலரும் மூவ் செய்து வருவதும் கடுப்பேற்றி வருகிறது. அதிமுக மூன்று அணிகளாக செயல்படுவது, எதிர்கட்சியாக இருந்தாலும் அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறைரெய்டு என பல அமைச்சர்களும் மவுனம் சாதித்து வருவது அதிமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மனதளவில் சோர்வடைய வைத்துள்ளது.
இந்நிலையில், எத்தனை தடைகள் வந்தாலும் கோவை அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்தே ஆக வேண்டும் என பல சிக்கல்களுக்கும் இடையே போராடி வருகிறார் எஸ்.பி.வேலுமணி.
இந்நிலையில்தான் ஈரோட்டில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக கொறாடா எஸ்.பி.வேலுமணி, ‘’நகர்ப்புற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றிபெறும். புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த அரசின் நலத்திட்டங்களும் எழுச்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கொண்டு வந்த நலத்திட்டங்கள் தான் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மக்கள் இயக்கமாக, மக்களுடைய பிரச்னைகளை முன்னெடுத்து வைக்கிற இயக்கமாக அதிமுக செயல்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்’’ என நம்பிக்கையை விதைத்துள்ளார்.