டி.டி.வி.தினகரனுக்காக விஜயகாந்திடம் தூது..? அதிமுக கூட்டணியில் குட்டையை குழப்பிய சரத்குமார்..!

By Thiraviaraj RMFirst Published Mar 3, 2019, 12:20 PM IST
Highlights

விஜயகாந்திடம் டி.டி.வி.தினகரன் அமைக்கும் மூன்றாவது அணிக்கு வருமாறு சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. 
 

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.

அதிமுக -பாமக கூட்டணியை சரத்குமார் விமர்சித்து வருகிறார். மக்களவை தேர்தல் நிலைப்பாடு குறித்து வரும் 5ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து இருந்த அவர், அதிமுக- பாமக கூட்டணியை பொருத்த வரையில் நிலைப்பாடு எடுத்தால் தெளிவாக எடுக்க வேண்டும். அரசியலில் விமர்சிக்கலாம். ஆனால் கீழ்த்தரமாக திட்டிவிட்டு எப்படி அருகில் உட்காருகிறார்கள் என்று தெரியவில்லை. நான் அப்படி இருக்கமாட்டேன்’’ எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் டி.டி.வி.தினகரனின் அமமுக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவமக்கள் கட்சி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இணைய முடிவெடுத்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சரத்குமார் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  விஜயகாந்த்தை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், ‘’அமெரிக்காவில் விஜயகாந்த் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோதே அவரை சந்திக்க முயற்சி செய்தேன். 

அவரது உடல் பூரண ஆரோக்கியமடைய வாழ்த்தினேன். விஜயகாந்திடம் அரசியல் பற்றி பேசினேன். எனது பார்வையில் அரசியல் நிலைப்பாட்டையும், எனது மனதில் பட்ட விஷயங்களையும் பற்றி விஜயகாந்த்திடம் பேசினேன். அதை வைத்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். எனது முடிவை வரும் 5ம் தேதி அறிவிக்க உள்ளேன். 

வாக்குகளுக்காக கொள்கையை விற்காமல் ஒத்த கருத்துடைய கூட்டணிக்காக பேசி வருகிறோம்’’ எனத் தெரிவித்தார். அவரிடம் டி.டி.வி.தினகரன் கூட்டணியில் இணைய இருக்கிறீர்கள் எனக் கூறப்படுகிறதே? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘’ எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லோருடனும் நட்போடு பேசி வருகிறோம். அந்த வகையில் எங்களுடனும் சில கட்சிகள் கூட்டணிக்காக பேசி வருகின்றன. நான் யாரிடமும் பேரம் பேசவில்லை. அதிமுகவை பாமக விமர்சித்து விட்டு கொள்கைகளை விற்று கூட்டணி சேர்ந்துள்ளன. 

கீழத்தரமாக திட்டிவிட்டு ஒன்று சேர்ந்து மாற்றம், முன்னேற்றம், ஏமாற்றம் என்கிற கொள்கையை இருக் கட்சிகளும் எடுத்திருக்கின்றன. ஆகையால் விஜயகாந்த் நல்ல முடிவை அறிவிப்பார்’’ எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஜயகாந்திடம் டி.டி.வி.தினகரன் அமைக்கும் மூன்றாவது அணிக்கு வருமாறு சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. 

click me!