நாங்கதான் ஒதுங்கிட்டோம்ல……பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டத்தில் இன்று சிவசேனா பங்கேற்குமா?

By Selvanayagam PFirst Published Nov 17, 2019, 8:03 AM IST
Highlights

டெல்லியில் இன்று  நடக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தை சிவசேனா கட்சி புறக்கணிக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பாஜக-சிவசேனா இடையிலான கூட்டணி 25 ஆண்டுகள் பழைமையானது. ஆனால், மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மனக்கசப்பால் இரு கட்சிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. 

இதனால், மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா வெளியேறியது.அதேசமயம், பாஜக இல்லாமல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கவும் சிவசேனா முயற்சித்து வருகிறது. இதற்காகக் குறைந்தபட்ச செயல்திட்டத்தையும் சிவசேனா உருவாக்கியுள்ளது.

வரும் 18-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.இதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை ஆலோசிக்கும் வகையில் இன்று டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

பாஜகவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் சிவசேனா இந்த கூட்டத்தில் பங்கேற்குமா என்று கேள்வி எழுந்தது. இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்திடம் நிருபர்கள் கேட்டனர், அதற்கு அவர் கூறுகையில், " இன்று நடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் சிவசேனா சார்பில் எந்தவிதமான பிரதிநிதியும் பங்கேற்கமாட்டார்கள். இந்த முடிவை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் பேசிவிட்டுதான் எடுத்தோம்" எனத் தெரிவித்தார்

இதற்கிடையே சிவசேனாவின் மற்றொரு எம்.பி. கூறுகையில், " சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் நினைவுநாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. அப்படி இருக்கையில் என்டிஏ கூட்டத்தில் எந்த எம்.பி. பங்கேற்க முடியும்" எனக் கேள்வி எழுப்பினார்.

click me!