பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவுக்கு உத்தரவிட வேண்டும் !! உச்சநீதிமன்றத்தில் 3 கட்சிகள் மனு… நாளை விசாரணை !!

By Selvanayagam PFirst Published Nov 23, 2019, 10:08 PM IST
Highlights

மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு கவர்னர் அனுமதி அளித்த விவகாரத்தில்  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாஜகவை பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் எனவும்  காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
 

மராட்டியத்தில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கிய நிலையில்,  திடீர் திருப்பமாக மராட்டிய முதலமைச்சராக  2-வது முறையாக தேவேந்திர பட்னாவிசும், துணை முதலமைச்சராக  அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என விளக்கமளித்திருந்தார். அஜித் பவாரின் இந்த திடீர் முடிவால் மராட்டிய அரசியலில் இன்று மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டது.

இந்தநிலையில், மராட்டியத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும்,  துணை முதலமைச்சராக  அஜித் பவார் ஆகிய இருவரையும் பதவி ஏற்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங். கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. 

அந்த மனுவில் பதவி ஏற்றுள்ள பாஜக உடனடியாக தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

click me!