படுதோல்வி எதிரொலி..! கூண்டோடு கலையும் கர்நாடக காங்கிரஸ்..?

By Manikandan S R SFirst Published Dec 9, 2019, 3:49 PM IST
Highlights

இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற 17 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருந்தார். இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு அமைந்தது. காலியாக இருந்த 17 சட்டமன்ற தொகுதிகளில் 15 இடங்களில் அண்மையில் இடைத்தேர்தல் நடந்தது. இரண்டு இடங்களில் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தேர்தல் நடைபெறவில்லை.

இந்தநிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று காலையில் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலை வகித்து வந்தது. இறுதியில் 12 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் 2 இடங்களிலும் சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். மத சார்பற்ற ஜனதா தள கட்சி அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று கர்நாடக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் பதவி விலக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் 12 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் அதில் பல இடங்களை தற்போது பாஜகவிடம் பறிகொடுத்துள்ளது.

click me!