அயலார் ஆதிக்கத்தில் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி...!! எரிமலையாய் வெடித்த சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Jul 22, 2020, 4:38 PM IST
Highlights

இந்த மண்ணிற்கோ அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கோ சிறிதும் தொடர்பற்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குடும்ப ஆதிக்கத்தின் கீழ் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியை அயலார் ஆதிக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- மண்ணின் விடுதலைக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் ஏழைகளின் நல்வாழ்விற்காகவும் பாடுபட்ட நமது ஐயா தெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவாக கட்டப்பட்ட மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி இன்று அயலாரால் அபகரிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 1968ஆம் ஆண்டு, தென் மாவட்ட கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய மாணவர்கள் பட்டப்படிப்புகள் படித்து, நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற்று அதன் மூலம் அவர்கள் சார்ந்த மக்களையும் முன்னேற்றுவதற்காக பொதுமக்கள் அளித்த சிறு சிறு பங்களிப்புடன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு அதன் வாயிலாக பின்தங்கிய கிராமப் பகுதிகளில் கல்லூரிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி அன்றைக்கு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மதிப்பிற்குரிய மூக்கையாத்தேவர் அவர்கள் சட்டமன்றத்தில் பேசி அரசின் அனுமதியை பெற்று உசிலம்பட்டி, கமுதி மற்றும் சங்கரன்கோயிலிலுள்ள மேலநீலிதநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் மூன்று கல்லூரிகள் தொடங்கப்பட்டன. உசிலம்பட்டி மற்றும் கமுதியில் உள்ள கல்லூரிகள் இன்றுவரை முறையாக அறக்கட்டளையால் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு ஏழை-எளிய மாணவர்களின் நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக மேலநீலிதநல்லூரில் உள்ள கல்லூரி மட்டும் இந்த மண்ணிற்கோ அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கோ சிறிதும் தொடர்பற்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குடும்ப ஆதிக்கத்தின் கீழ் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெயரால் ஏழை மாணவர்களின் நலனுக்காக பரந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட கல்லூரி தன் நோக்கத்திலிருந்து முற்றிலும் விலகி, ஒரு குறிப்பிட்ட அயலார் குடும்பத்தின் சுயநலம் மற்றும் இலாப நோக்கத்திற்காக செயல்படுகிறது என்பது மிகவும் வேதனையைத் தருகிறது. 

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்வதுடன் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியைத் திட்டமிட்டு அபகரித்து வணிக மயமாக்கி தன்னலத்துடன் செயல்படும் அயலார் ஆதிக்கத்திலிருந்து மீட்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.மேலும் அரசின் மேற்பார்வையுடன் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ், மேலநீலிதநல்லூர் கல்லூரி செயல்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!