காவிரி விவகாரத்தை கடந்து கர்நாடகாவுடன் கைகோர்க்கும் தமிழ்நாடு? சித்தராமையாவின் அழைப்பும்.. அமைச்சரின் பதிலும்

First Published Mar 24, 2018, 10:38 AM IST
Highlights
siddaramaiah invitation and tamilnadu minister response


தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முடிவை எதிர்க்க வேண்டும் என தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநில முதல்வர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

மாநிங்களுக்கு இடையேயான வரி வசூலிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை மத்திய நிதிக்குழு கவனித்து வருகிறது. இதுவரை 1971-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வது நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த நவம்பரில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, என்.கே.சிங் தலைமையில் 15-வது மத்திய நிதிக்குழுவை அமைத்தது.

இந்தக் குழு நிதிப் பகிர்வில் ஏற்கெனவே பின்பற்றப்பட்ட 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக, இனி 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதிப் பகிர்வு செய்யப்படும் என அறிவித்தது. 

இதனால் தென் மாநிலங்களுக்கான நிதி குறையும் என தெரிவித்து ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தராததால், ஆத்திரமடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தென் மாநிலங்கள் தான் மத்திய அரசுக்கு அதிகமான வரி வருவாய் ஈட்டித்தருகின்றன. ஆனால் தென் மாநிலங்களிடமிருந்து வரி வசூல் செய்து வடமாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்குவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய அரசு 15-வது நிதிக்குழு நிதிப் பகிர்வில் 1971-க்கு பதிலாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்துமாறு கூறியுள்ளது. இது தென் மாநிலங்களின் நலனுக்கு எதிராக அமையும். எனவே நாம் இதற்கு எதிராக போராட வேண்டும் என தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய தென் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

காவிரி விவகாரத்தை கடந்து, மாநிலங்களுக்கிடையேயான விவகாரங்களை மறந்து, மாநில சுயாட்சி மற்றும் உரிமைகளை காக்க தென் மாநில முதல்வர்கள் கைகோர்ப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில், சித்தராமையாவின் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், 2011 மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு ஏற்புடையது அல்ல. தமிழகத்துக்கு ரூ20,000 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதி தன்னாட்சி பேணி காக்கப்பட வேண்டும். தமிழகத்திற்கான நிதி குறைந்தால் கண்டிப்பாக போராடுவோம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 

click me!