
திமுகவில் உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே பல மாவட்டங்களில் உடன்பிறப்புகளுக்கு நிம்மதி போய்விட்டது. அசுர பலத்தோடு ஆட்சி அமைத்தும் இந்த உட்கட்சி பூசல்களால் ஒன்றுமில்லாமல் போய்விடுவோமோ என்ற புலம்பல்கள் பலமாகவே கேட்கிறது. அதிலும், சேலம் மாவட்டத்தில் நிலைமை மிக மோசம்..
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைத்திருக்க வேண்டிய திமுக-வுக்கு தண்ணி காட்டியது கொங்கு மண்டலம். கொங்கு வெற்றியால் தான் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியமைத்தார். சேலம், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் தருமபுரியை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் 2021ம் ஆண்டு தேர்தலிலும் திமுக-வின் நிலை பரிதாபம் தான். இதனாலேயே கொங்கு மண்டலத்தை குறி வைத்து களமிறங்கினார் முதல்வர் ஸ்டாலின். வாராவாரம் கோவைக்கு போகும் ஸ்டாலின் என்று தலைப்பு வைக்கும் அளவுக்கு கவனம் செலுத்துகிறார் அவர். ஆனால் கொங்கு மண்டல திமுகவின் தோல்விக்கு முழுக்க முழுக்க உட்கட்சி பிரச்சனையே காரணம் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக திமுகவில் உட்கட்சித் தேர்தல் அறிவித்தது முதலே ஏரியாவில் குழாயடி சண்டைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் ஒன்றியம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அதில் சிட்டிங் ஒன்றிய செயலாளர் விஜயகுமாருக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் தலைமையில் முறையிட்டு அயோத்தியாபட்டணம் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாக பிரித்து திருத்தம் செய்து தலைமை மீண்டும் அறிவித்தது. தற்போது ஒன்றியங்களுக்கு உண்டான உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் விஜயகுமாருக்கு அயோதியபட்டினம் தெற்கு ஒன்றியத்தை சமாதானம் பேசி ஒன்றிய செயலாளர் பதவி கொடுப்பதாக நேற்று முடிவு செய்யப்பட்டது.
அதேசமயம் அயோத்தியாபட்டினம் வடக்கு ஒன்றியத்திற்கு நடந்த சமாதான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வந்தது. ஆனால், திடீரென யாரும் எதிர்பாராத வகையில் வடக்கு ஒன்றியத்தை மாவட்ட செயலாளரும் சிவலிங்கமும் தேர்தல் ஆணையாளர் பரந்தாமனும் சேர்ந்து முடிவெடுத்து, மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சி நிர்வாகிகள் ஆதரவு இல்லாத ஒருவருக்கு ஒன்றிய செயலாளர் பதவியை அளிப்பதாக முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கட்சிக்காக எந்த போராட்டத்திலும் பங்கெடுக்காதவருக்கு ஒன்றிய செயலாளர் பதவியை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உட்கட்சி தேர்தல் நடக்கும் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் திமுக செல்வாக்கு இல்லாமல் திணறி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் திமுக உட்கட்சி பூசல் உச்சம் பெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை உடனடியாக கவனித்தாக வேண்டும். அதிலும் அதிமுக தலைமை பஞ்சாயத்து உச்சகட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தை திமுக கொங்கு மண்டலத்தில் சாதகமாக்கிக்கொள்ள வேண்டுமே தவிர, உட்கட்சி சண்டைகளால் தன்னைத் தானே பலவீனப்படுத்திக்கொள்வது நல்லதல்ல என்பது அரசியல் நோக்கர்கள் கருத்து. திமுக தலைவர் கவனிப்பாரா..?