
நாஞ்சில் சம்பத் மேடையேறி மைக் பிடிக்கிறார் என்றால் அ.தி.மு.க.வின் ஆளும் அணிக்கு லட்சார்ச்சனை நிச்சயம்! என்று பொருள்.
அந்த வகையில் மிக சமீபத்தில் கோயமுத்தூரில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் மேடையேறிய நாஞ்சில் சம்பத் தினகரனை வாயார புகழ்ந்துவிட்டு, ஆளும் தரப்பை வெளு வெளுவென வெளுத்துவாங்கினார். அதிலும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை வழக்கமான வேகத்துடன் விளாசித் தள்ளினார் நாஞ்சில்...
“ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல தினகரன் வெச்ச குக்கர்ல தி.மு.க. வெந்தது, இரட்டை இலை கருகிவிட்டது, தாமரையோ சில்லு சில்லாகிவிட்டது. இதே முடிவுதான் தமிழகத்தில் இனி எந்த தேர்தல் நிகழ்ந்தாலும் வரும்.
கொடுமை! அ.தி.மு.க. சார்பா உருப்படியா ஒரு வேட்பாளரை நிறுத்துங்கய்யான்னு சொன்னா...அகில உலக ஆண்கள் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்குன மதுசூதனனை நிப்பாட்டினானுங்க. அவரை அவங்க டீமை சேர்ந்த ஜெயக்குமாரே தோற்கடிச்சார்.
அதுதான் ஹைலைட்டு.” என்றவர் மெல்ல பன்னீர் செல்வத்தை பிறாண்ட துவங்கினார் இப்படி...(என்னதான் நாஞ்சில் ’ன்,ன்’ போட்டு பன்னீரை ஒருமையில் பேசியிருந்தாலும் கூட, துணை முதல்வருக்கான மரியாதையில் பங்கம் வந்துவிட கூடாது என்று சொல்லி நாம் ‘ர், ர்’ போட்டே பதிவிடுகிறோம்)
“எட்டு கயிறு, நாலு பொட்டு, வெச்சுக்கிட்டு ஆளை பார்க்கவே அருவெறுப்பா இருப்பார்யா பன்னீரு. நான் கேட்கிறேன், நீ என்ன முதல்வராகவே இருக்கணும்னு பொறந்த ஆளா? அந்த பதவி இல்லாம உன்னால வாழவே முடியாதா? கால்ல விழுந்து விழுந்து அன்னைக்கு அம்மாவை ஏமாத்தின. இப்போ மோடி கால்ல விழுந்து அவரை ஏமாத்திட்டிருக்கிற.
நாங்களெல்லாம் தொண்டர்களை நம்பி கட்சி நடத்துறவங்க, ஆனா ஆளும் கோஷ்டியான நீங்களோ டெண்டர்களை நம்பி கட்சி நடத்துறீங்க. நல்லா புரிஞ்சுக்குங்க எம்.ஜி.ஆர். ஈட்டாத வெற்றியையும், அம்மா பெறாத வெற்றியையும் சேர்த்தே பெறுவார் எங்கள் தலைவர் தினகரன்.” என்று உருமிவிட்டுதான் கீழே இறங்கினார்.
கோயமுத்தூர் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிய வீடியோ பதிவை தினகரன் வாங்கிப் போட்டுப் பார்த்திருக்கிறார். அப்போது ஷாக் ஆகி, அதிர்ச்சியின் உச்சத்துக்கு போனவர், ‘புரட்சித் தலைவர் மற்றும் அம்மாவை விட நான் பெரிய மனுஷன் அப்படிங்கிற மாதிரி நாஞ்சில் சம்பத் எப்படி பேசலாம்? அவங்களை விட பெரிய வெற்றியை நான் எப்படி பெற்றிட முடியும்?
இன்னொரு இடத்துல ‘இரட்டை இலை கருகிடுச்சு’ன்னு சொல்லியதும் ரசிக்கும்படி இல்லை. என்ன இருந்தாலும் அது அம்மா கட்டிக்காத்த சின்னம். இப்படி பேசுறது சரியில்லையே! இனி இப்படி பேசவேண்டாம். அதிர்ச்சிகரமா இருக்குது.’ கடுமையான திருத்தத்தை சொல்லியிருக்கிறார்.