
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய அதிமுகவில் உள்ள 34 ஊராட்சி கழக செயலாளர்களில் 27 ஊராட்சி கழக செயலாளர்கள் ஓ பி எஸ் அணிக்கு ஆதரவு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் கிருஷ்ணகிரியில் சசிகலா அணி ஆடிபோய் உள்ளது.
அதிமுக சசிகலா தரப்பு ஓ.பி.எஸ் தரப்பு என இரண்டாக பிரிந்ததையடுத்து பன்னீர்செல்வத்திற்கு பொதுமக்களின் ஆதரவு பெருகி வருகிறது.
சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் உத்தரவிட்டதால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யபட்டார்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் மக்களிடையே நீதி கேட்டு செல்வதாக கூறி அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவதுடன் தனது வட்டாரத்தையும் பெருக்கிக்கொண்டு வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் மொத்தம் 34 ஊராட்சி கழக செயலாளர்கள் உள்ளனர். அதில் 27 ஊராட்சி கழக செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஒருமனதாக ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சசிகலா அணியை சார்ந்த மகனூர்பட்டி, சந்திரப்பட்டி, கீழ்குப்பம், மேட்டுத்தாங்கல், வீரணகுப்பம், வெள்ளக்குட்டை, நொச்சிப்பட்டி ஆகிய ஊராட்சி கழக செயலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
இதையடுத்து கே.பி.முனுசாமி மற்றும் ஊத்தங்கரை எம்.எல்.ஏ மனோரஞ்சிதம் நாகராஜன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க 27 ஊராட்சி கழக செயலாளர்களும் கிருஷ்ணகிரி சென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி எம்.பி அசோக் குமார் மற்றும் ஊத்தங்கரை எம்.எல்.ஏ மனோரஞ்சிதம் நாகராஜன் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் ஏற்கனவே ஓ.பி.எஸ் அணியில் இணைந்துள்ள நிலையில், தற்போது அதே மாவட்டத்தில் உள்ள 27 ஊராட்சி கழக செயலாளர்களும் ஓ.பி.எஸ் க்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் அப்பகுதியில் சசிகலா தரப்பு முற்றிலும் காலியாகி விட்டது என்றே சொல்லலாம்.