
தொண்டர்களை ஆலோசிக்காமல் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக்கு நிர்வாகிகளை தீபா நியமித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தீபாவிற்கு எதிராக தொண்டர்கள் போர்கொடி தூக்கியுள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்கு பின், சசிகலா தலைமையில் அதிமுக இயங்கி வந்தது. இது பெரும்பாலான அடிமட்ட தொண்டர்களுக்கு பிடிக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சசிகலாவுக்கு எதிராக பல கருத்துகளை முன்வைத்து வந்தார். இதனால் சசிகலா தலைமை பிடிக்காத அதிமுகவினரின் ஆதரவு தீபா பக்கம் திரும்பியது.
இதையடுத்து, தீபா, ஜெயலலிதாவின் பிறந்த தினமாக பிப்ரவரி 24ல் 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா' பேரவையைத் தொடங்கினார். அப்போது, கட்சிக் கொடியை வெளியிட்டு, காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.
இதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.வி.ராஜா தீபாவுக்கு கார் ஓட்டுபவர் என்பதால் தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
செயலாளர் நியமிப்பதில் ஏற்பட்ட கடுப்பால் தீபா ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன் மறியலில் ஈடுபட்டனர். பதவி வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஏ.வி.ராஜாவை செயலாளராக ஏற்க முடியாது என்று ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தீபா, பேரவைக்கு தற்காலிகமாக தானே செயலாளராக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று மாலை தீபா ஆதரவாளர்கள் மீண்டும் அவரது வீட்டு முன்பு ஒன்று கூடினர்.
அவர்கள் தீபாவை சந்தித்து கருத்துக்களை கூற முயற்சி செய்தபோது, தீபாவை சந்திக்க முடியவில்லை. இதனால் கடுப்பான தொண்டர்கள் தீபாவை எதிர்த்து கோஷமிட்டனர். அவர்களை தீபாவின் கணவர் சமாதானம் செய்து வைத்தார்.
ஆரம்ப கட்டத்திலேயே நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் தீபா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.