’டாக்டருக்கு படித்ததற்காக வெட்கப்படுகிறோம்...’கண்ணீர் விட்டு கதறும் மருத்துவரின் வீடியோ..!

By Thiraviaraj RMFirst Published Apr 20, 2020, 4:10 PM IST
Highlights

மக்கள் எங்களுக்கு கொடுக்கும் பரிசு இதுதானா? மருத்துவர்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கிறது..? இந்த வீடியோவை நான் வெளியிடுவதற்காக வெட்கப்படுகிறேன். 

கொரொனாவால் உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததை நினைத்து சக மருத்துவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ கணத்த இதயங்களையும் கதற வைத்துள்ளது. 

கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த 55 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று உயிரிழந்தார்.  இதனிடையே, டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு பகுதிக்கு கொண்டு சென்றனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சிலர் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில், ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைந்தது. ஊழியர் காயமடைந்தார்.

 

இதுகுறித்து மருத்துவர் சைமன் சடலத்தை தகனம் செய்யப்போன போது நடந்தது என்ன? உடன் சென்ற மருத்துவர் பாக்கியராஜ் கண்ணீர் மல்க வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதில், ‘’50 அடியாட்களுக்கும் மேல் கூடி நின்று கல்லையும், கட்டைகளையும் வைத்து எல்லோரையும் அடித்து தாக்கினர். முக்கியமாக 50 வயதான ஒரு இன்ஸ்பெக்டரை ஏழு பேர் சேர்ந்து நின்று பயங்கரமாக தாக்கினர். அவர் மருத்துவமனையில் இருக்கிறார். அப்படியே உடலை போட்டுவிட்டு ஓடி வந்தோம்.

அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். மருத்துவமனையில் இருக்கிற மருத்துவ நண்பர்களுக்கு இதுதான் நிலைமையா? மக்கள் எங்களுக்கு கொடுக்கும் பரிசு இதுதானா? மருத்துவர்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கிறது..? இந்த வீடியோவை நான் வெளியிடுவதற்காக வெட்கப்படுகிறேன். தலை குனிகிறேன். ஏனென்றால், இன்றைக்கு நாங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டு அவரை மருத்துவமனையில் வைத்து காப்பாற்ற முடியாமல், அவரது இறுதிச் சடங்கை கூட சரியாக செய்ய முடியாமல் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மருத்துவர் சைமன்
சடலத்தை தகனம் செய்யப்போன போது நடந்தது என்ன? உடன் சென்ற மருத்துவர் பாக்கியராஜ் கண்ணீர்.. மனித குலத்திற்கே இச்சம்பவம் இழுக்கு.. pic.twitter.com/P2IkF44yoR

— Mahalingam Ponnusamy (@mahajournalist)

 

அவருடைய ஆத்மா எப்படி சாந்தி அடையும்? எங்கள் நிலையை நினைத்து வேதனைப்படுகிறோம். இவ்வளவு பெரிய விஷயம் மக்களுக்கு தெரியவே இல்லை. எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளாமல் எங்களையெல்லாம் கல்லைக் கொண்டு அடித்து விரட்டி உடலை அப்படியே போட்டுவிட்டு வரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். இனி எந்த ஒரு மனிதனுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. அரசு இன்னும் இப்படிப்பட்ட நடவடிக்கை மீது கவனம் செலுத்த வேண்டும். தயவு செய்து மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள். அடக்கம் செய்வதற்கு இடம் கிடைக்காமல் நேற்று முழுவதும் அலைந்தோம். அதற்கான விஷயங்களையும் மக்களிடம் தயவுசெய்து பேசுங்கள். டாக்டருக்கு படித்ததற்காக வெட்கப்படுகிறோம்’’என அவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ நெகிழ வைக்கிறது. 

click me!