
ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஆன்மீகம், ஆத்திகம், ஆரியம் மூன்றுக்கும் எதிர் துருவமாகவே தன்னை பல வருடங்களாக காட்டிக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். அப்பேர்ப்பட்டவர் தனது அரசியல் பயண துவக்கத்தை ‘நல்ல நாள்’ பார்த்து ஆரம்பித்துள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
அவ்வை சண்முகி படத்தில் மடிசார் மாமியாக கமல் அக்குறும்பு செய்தபோதும், மற்றொரு படத்தில் கறிக்கடைக்காரராக நடித்தபோதும், ‘நான் அசைவம் உண்பவன் தான் ’ என்று கெத்து ஸ்டேட்மெண்ட் விட்டபோதும், இன்னும் சில இந்த மாதிரியான சமயங்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களின் ஆதங்கத்தையும், ஆத்திரத்தையும் சம்பாதித்தவர் கமல்ஹாசன்.
பெரியாரை தனது வழிகாட்டி என்று சொல்லியபடி ‘நாத்திக திராவிடனாக’ தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், தி.மு.க. போல் இந்துக்களையும் அவ்வப்போது சீண்டக்கூடியவர் என்றும் பெயரெடுத்திருப்பவர் கமல்ஹாசன்.
இப்பேர்ப்பட்ட கமல், ‘பொண்ணு கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று சொல்லப்பட கூடியதும், புது மற்றும் சுப காரியங்களுக்கு நல்ல நாளுமான இன்று! அதாவது புதன்கிழமையில் தனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதை ‘நல்ல நாள் பார்த்து கட்சி துவக்குகிறார் கமல்ஹாசன்’ என்று சொல்லி சிரிக்கின்றனர் விமர்சகர்கள்.
ஆனால் இதை மறுக்கும் கமலின் மன்ற நிர்வாகிகளோ ‘அட பதர்களா! அவர் அரசிலில் காலெடுத்து வைக்கும் முதல் நிகழ்வே ‘எமகண்டத்தில் தான்!.’ என்று மறுக்கிறார்கள். ஆனால் அதை மீண்டும் விமர்சிக்கும் விமர்சகர்கள், ‘புதன் என்பதே ஒட்டுமொத்தமாக நல்ல நாள்’ என்கிறார்கள்.
அப்படியா கமல்!? நீங்க நல்ல நாள் பார்த்து கட்சி ஆரம்பிக்கிறீங்கன்னு சொல்லை ஆனால் இந்த சென்மென்டெல்லாம் பார்க்காமதான் இதையெல்லாம் செய்றீங்களா?! அப்படிங்கிறதுதான் டவுட்டே.