#BREAKING முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்... உயர் நீதிமன்றம் உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 7, 2021, 11:06 AM IST
Highlights

நடிகையை ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததுடன், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அடையாறில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கடந்த  ஜூன் 20ம் தேதி கைது செய்தனர்.  


சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி நிர்மல் குமார், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

நிபந்தனையாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடைய பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், 2 வாரங்களுக்கு காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், அந்த 2 வாரத்திற்கு பிறகு எப்போது எல்லாம் விசாரணைக்கு தேவைப்பட்டாலும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக முதன்மை அமர்வு நீதிமன்றம் மணிகண்டனின் ஜாமீன் மனுவை ரத்து செய்த போது காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரி இருந்தது. அந்த மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மணிகண்டன் நடிகைக்கு அனுப்பிய மெசெஜ், போட்டோக்கள், வீடியோக்கள் அடங்கிய செல்போன் மதுரையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கைப்பற்றினால் மட்டுமே விசாரணை உறுதியாக இருக்கும் என்றும் 5 நாட்கள் காவல் கோரியது. 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்க முடியாது எனவும், ஜூலை 3, 4ம் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதனையடுத்து மணிகண்டனை மதுரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தற்போது செல்போனை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விசாரணை நிறைவடைந்தது, இனியும் போலீஸ் விசாரணை தேவையில்லை எனக்கருதிய நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். 
 

click me!