இந்தி கற்றுக்கொள்ளச் சொன்ன சேவை மய்ய அதிகாரி... மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொண்ட சோமோட்டோ நிறுவனம்..!

By Thiraviaraj RMFirst Published Oct 19, 2021, 5:32 PM IST
Highlights

 இந்த ஒரு காரணத்திற்காக அவரை பணியிலிருந்து நீக்குவது ஏற்புடையதல்ல என்று சோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தி கற்றுக்கொள்ளச் சொன்ன சேவை மய்ய அதிகாரி... மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொண்ட சோமோட்டோ நிறுவனம்..!

இந்தி நமது தேசிய மொழி, அதை சிறிதளவாவது கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியதால் சர்ச்சைக்குள்ளாகி நீக்கப்பட்ட ஊழியர், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டிருப்பதாக அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்திருக்கிறார்.

சோமோட்டோவில் உணவு ஆர்டர் செய்ததில் டெலிவரியின் போது, ஒரு பொருள் மட்டும் விடுப்பட்டுள்ளது. இது குறித்து சோமோட்டோ வாடிக்கையாளர் சேவையை சாட் வழியாக தொடர்பு கொண்டிருக்கிறார் அவர். அதில், விடுபட்ட பொருளுக்கான பணத்தை திருப்பித்தர வேண்டும் என கேட்டிருக்கிறார்.

அவரிடம் சாட் செய்த வாடிக்கையாளர் சேவை பிரிவு அதிகாரி, உங்கள் வட்டார மொழி தடையாக இருக்கிறது. தேசிய மொழியான இந்தியை, ஓரளவு புரிந்து கொள்ளுகின்ற அளவிற்காவது அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுரை செய்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ந்த விகாஸ், இந்த உரையாடல் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டுகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த ட்வீட் விரைவாகவே வைரல் ஆனது. மேலும் பல்வேறு தரப்பினரும் சோமோட்டோவின் பொறுப்பற்ற பதிலை கண்டித்து ட்வீட்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக #RejectZomato என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. இதையடுத்து, நடந்த சம்பவத்திற்கு சோமோட்டோ மன்னிப்பு கோரியிது. இதுதொடர்பாக அந்நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம்தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான கருத்தை பகிரக்கூடாது என தொடர்ந்து எங்கள் முகவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த ஒரு காரணத்திற்காக அவரை பணியிலிருந்து நீக்குவது ஏற்புடையதல்ல என்று சோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், உணவு விநியோக நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் உள்ள ஒருவர் அறியாமல் செய்த தவறு தேசிய பிரச்னையாக மாறியிருக்கிறது. நாட்டின் சகிப்புத்தன்மை என்பது தற்போது இருப்பதைவிட அதிகரிக்க வேண்டும். யாரை குறைக்கூறுவது?

அதேபோல அந்த பணியாளரை நாங்கள் மீண்டும் பணியமர்த்துவோம். இந்த ஒரு காரணத்திற்காக அவரை பணியிலிருந்து நீக்குவது ஏற்புடையதல்ல. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல அவருக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போதுதான் அவர்கள் கற்றலின் தொடக்கத்தில் இருந்து வேலையை தொடங்கியிருக்கிறார்கள். பிராந்திய மக்களின் உணர்வுகளையும், மொழியின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளும் அளவிற்கு அவர்கள் யாரும் நிபுணர்கள் அல்ல. நானும் கூட.

நாம் அனைவரும் ஒருக்கொருவர் மற்றவர்களின் குறைபாடுகளை பொறுத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடைய மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழ்நாட்டை நாங்கள் நேசிக்கிறோம். நாட்டின் மற்ற பகுதிகளை நேசிப்பதைபோல உங்களையும் நேசிக்கிறோம். கூடுதலாகவோ, குறைவாகவோ அல்ல. நாம் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

click me!