
தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆட்சி கலைந்தவுடன், ஓபிஎஸ், இபிஎஸ் தவிர அனைவரும் தங்களுடன் வந்துவிடுவார்கள் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுக இரண்டாக உடைந்ததது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஓர் அணியும் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வருகிறது.
கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை தொடர்பாக நடைபெற்ற பஞ்சாயத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பிற்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. என்னதான் இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் பெற்றி பெற்றார்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், அதிமுகவை நீக்க சட்டரீதியான போராட்டம் தொடர்வதாகவும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக காலமதாமதம் ஆகும் என்பதால் அதற்கு முன்னதாக வரவுள்ள உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்ள வசதியாக தனிக்கட்சி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து கோத்தகிரி சென்ற அவர், அங்கும் செய்திளாளர்களை சந்தித்தார். அப்போது, ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 5 பேரைத் தவிர மற்ற அனைவரும இந்த ஆட்சி கலைந்தவுடன் தங்களிடம் வந்துவிடுவார்கள் என கூறினார்.
தனியாக கட்சி தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும், தங்கள் கட்சிக்கு அதிமுக அம்மா என்ற பெயரை பயன்படுத்த நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.
தற்போது தேர்தல் ஆணைய தீர்ப்பின்படி கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் இபிஎஸ் தரப்பு தற்காலிகமாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
ஒரு வேளை நாங்கள் தனிக்கட்சி தொடங்கினால் அதன் நோக்கம் அதிமுகவை மீட்பதாகவே இருக்கும் என டி.டி.வி.தினகரன் கூறினார்.