நான் பதினாறு வயது பருவ மங்கை: நீக்கப்பட்ட தீரனின் தீப்பிடிக்கும் குமுறல்...

First Published Jan 17, 2018, 10:58 AM IST
Highlights
Dheeran Explain about his dismissed from ADMK


ஜெயலலிதாவின் நம்பிக்கை மிகு நபராக, அவரது கட்சி சார்பாக மீடியா விவாதங்களில் கலந்து கொண்டு வீரியமாக செயல்பட்டவர் பேராசிரியர் தீரன். சமீபத்தில் அ.தி.மு.க.விலிருந்தே நீக்கப்பட்டிருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் ஒரு சேனல் விவாதத்தில் அவர் கலந்து கொண்டு தன் கட்சிக்காக பேசிக் கொண்டிருக்கும்போதுதான், அ.தி.மு.க.விலிருந்து அவர் நீக்கப்பட்ட ஃபிளாஸ் நியூஸ் ஓடியது.

அதிர்ச்சியிலிருக்கும் தீரன் சொல்வது என்ன?...

“என்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு என்ன காரணமென்றே சொல்லவில்லை. இனி அதைப் பற்றி பேசியும் பிரயோசனமில்லை.

கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ‘தினகரனும் எங்களில் இருந்து சென்றவர்தான். அவர் போட்டியிட்டதும் அம்மாவின் கட்சிக்காகத்தான். அவருக்கு விழுந்த ஓட்டுகளும் எங்களுக்காகத்தான். நாங்களும், தினகரனும் இணையும் காலமும் வரலாம்.’ என குறிப்பிட்டேன். எனது நீக்கத்துக்கு அதுவே காரணமாக இருக்கலாம்.

தமிழகத்தை சேர்ந்த சாம் தினகரன் திருவேங்கடம் எனும் விஞ்ஞானி அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் வடிவமைத்திருக்கும் செட்டாப் பாக்ஸ் மூலம்  60 வகையான சேவைகளை பெறலாம். இவரது திட்டங்கள் குறித்த அறிக்கை ஒன்றை உருவாக்கி முதல்வரிடம் கொடுத்தேன். பல மாதங்களாக அவர் அதைப் படித்துக்கூட பார்க்கவில்லை. முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ மக்களை பற்றி என்ன கவலையிருக்கிறது?

பழனிச்சாமி  மற்றும் பன்னீர் இருவரை பொறுத்தவரையில் தினகரன் என்பவர் ஒரு கொடூரமான ராட்சஸ பயங்கரவாதி! என நினைக்கிறார்கள் போலும். அவரைப் பற்றி யார் பேசினாலும் இப்படித்தான் கட்டம் கட்டுகிறார்கள்.

அ.தி.மு.க.விலிருந்து என்னை நீக்கிவிட்டதால் நான் தினகரனிடம் போவேன் என்று சொல்லிவிட முடியாது. பதினாறு வயது பருவ மங்கை போன்ற நிலையிலிருக்கும் என்னை இப்போது எல்லோரும் அழைக்கத்தான் செய்வார்கள். அதற்காக தினகரனுடனோ அல்லது வேறு யாருடனோ சென்று அசிங்கப்பட முடியாது.”

..............என தீப்பிடிக்க பேசியிருக்கிறார் தீரன்.

click me!