கதாநாயகர்களுக்கு இணையாக தமிழக இளைஞர்களால் கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டமான்: தாய்த் தமிழகத்தின் நன்றிக்கடன் .

By Ezhilarasan BabuFirst Published Nov 2, 2020, 4:37 PM IST
Highlights

ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது சிறப்பு வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நடக்க சட்டப் போராட்டம் நடத்தி பல்வேறு முயற்சிகளை எடுத்து தாய்த் தமிழக மக்களுக்கு தன்னுடைய பங்களிப்பை அளித்தவர் செந்தில்.

இலங்கை மலையகத் தமிழர்களில் செல்லப்பிள்ளையும், இலங்கை அரசியலில்  தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வரும் செந்தில் தொண்டமான் பிறந்த நாள் விழா தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கொண்டாடப்பட்டுள்ளது.

சமீபத்தில் இலங்கையில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மலையகத் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பதுளை தொகுதியில் போட்டியிட்டவர் செந்தில் தொண்டமான். இலங்கை அரசியலில் நம்பிக்கைக்குரிய இளம் தலைவராகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழக கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர்களில் முக்கியமானவராகக்  கருதப்படுகிறார் செந்தில் தொண்டைமான். 

அவர் தற்போது இலங்கையில் வசித்து வந்தாலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நலச்சங்கத்தின் கவுரவ தலைவராகவும் அறியப்படுகிறார். தமிழகத்திலுள்ள குறிப்பாக புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிக்கவராக உள்ளார். காரணம் தமிழர்களின் பாரம்பரியம் விளையாட்டான ஜல்லிக்கட்டை தன் உயிருக்கு நிகராக நேசிக்கும் அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக சொந்தமாக ஜல்லிக்கட்டு காளைகளை அவர் வளர்த்து வருவதே அதற்கு காரணம். ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு முதல்  குரல்  செந்தில் தொண்டைமானுடையதாகவே இருக்கும். அதேபோல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் பல்வேறு இடங்களில் அதாவது கிராமங்களில் நடத்துவதற்கு நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி உத்தரவு பெற்றுத் தந்தவர்களில் மிக முக்கியமான கருதப்படுகிறார். 

ஜல்லிக்கட்டு போட்டியை இளைஞர்கள் மத்தியில் ஊக்குவித்து இளைஞர்களுக்கு உதவிகளை செய்வதில் முதல் ஆளாக தன்னை அற்பணித்துள்ளார் தொண்டமான். ஜல்லிக்கட்டு தொடர்பாக உலக அளவில் முதன்முதலாக தபால்தலை வெளியிட காரணமாக அமைந்துள்ளார். அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது சிறப்பு வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நடக்க சட்டப் போராட்டம் நடத்தி பல்வேறு முயற்சிகளை எடுத்து தாய்த் தமிழக மக்களுக்கு தன்னுடைய பங்களிப்பை அளித்தவர் செந்தில். இப்படி தமிழகத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு குரல் எழுப்பி வரும் தமிழர் செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் தமிழகத்தில் பல  கிராமங்களில் கட்டவுட் வைத்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

செந்தில் தொண்டமான் கடல்கடந்து இலங்களியில் வசித்தாலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக இருந்து வரும் நிலையில் அவரது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

click me!