
கடந்த அதிமுக ஆட்சியின்போது மிகப்பிரபலமான அமைச்சர்களில் முக்கியமானவர் செந்தில்பாலாஜி. இவர் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
கரூரை அடுத்த ராமேஸ்வரப்பட்டி என்னும் குக்கிராமத்தை சேர்ந்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் ஜெயலலிதா மீது உள்ள அதீத விசுவாசத்தால் படிப்படியாக அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராகும் அளவிற்கு முன்னேறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களுரில் இருந்தபோது, பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி தீச்சட்டி ஊர்வலம், 10 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றுதல் என சங்கர் பட பாணியில் பிரம்மாண்டமான முறையில் பூஜைகளை நடத்தினார்.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ரத்த தான முகாமில் 3 கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
உச்சகட்டமாக வெற்று உடம்புடன் ஜெயலலிதாவுக்காக அங்கப்பிரதட்சணமும் செய்தார். இப்படி ஏறு முகத்தோடு இருந்த செந்தில் பாலாஜிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சாதிக் உருவத்தில் வந்தது தலைவலி.
சாதிக் மற்றும் எதிர் கோஷ்டியினர் தொடர்ந்து அடித்த அடியில் வீழ்ந்தே போனார்.
அமைச்சர் பதவியை இழந்ததுடன் மாவட்ட செயலாளர் பதவியும் பறிபோனது. இருப்பினும், விடாது முயற்சித்த செந்தில் பாலாஜி, கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அரவக்குறிச்சி தொகுதியை போராடி பெற்றார்.
கரூர் தொகுதியில்தான் போட்டியிடப்போகிறோம் என எண்ணியிருந்த செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்தது தலைமை. பக்கத்து தொகுதியான அரவக்குறிச்சிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் அங்கு பலம் வாய்ந்த எதிர்கட்சி வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியுடன் போட்டியிட வேண்டியிருந்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
அசராத செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பெரும்பான்மையான முஸ்லீம் வாக்காளர்களை தன் வசம் ஈர்த்தார்.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும் இந்த கட்சியை சேர்ந்தவர்கள் கூட ஆண், பெண் வித்தியாசம் பாராமல் செந்தில் பாலாஜிக்கு ஆதரவு அளித்தனர்.
இதனால் அரண்டுபோன உள்ளுர்வாசியான பெரும் தொழிலதிபர் கே.சி.பழனிச்சாமி அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் பணத்தை வாரி இறைத்தார்.
எதிர்தரப்பான அதிமுகவும் பணத்தை அள்ளி வீசியதால் தேர்தலே நிறுத்தப்பட்டது அனைவரும் அறிந்த கதை.
இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜிக்கு மற்றுமொரு சோதனையாய் வந்தது தனது தம்பி அசோக் மற்றும் முன்னாள் பி.ஏ.கார்த்திக் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார் என்ற செய்தி. .
செந்தில் பாலாஜியை திட்டமிட்டே அரவக்குறிச்சி தொகுதியில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக உள்கட்சி எதிரிகளின் கைங்கரியம் தான் இது என்பது உளவுத்துறை மூலமாக தலைமைக்கு உண்மை தெரிய வந்துள்ளது.
போக்குவரத்து துறையில் பணி நியமனங்கள் தொடர்பாக 60 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கூறி சிவங்கையை சேர்ந்த நபர் ஒருவர் வழக்கு தொடுத்ததால் மேலும் சிக்கலாகி போனது செந்தில் பாலாஜியின் நிலைமை.
கடந்த மாதம் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பும் வெளியாகி அதில் செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதால் தலைமையின் கவனம் மீண்டும் செந்தில் பாலாஜியின் பக்கம் திரும்பியது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று இருந்த நிலையில், திமுக கொங்கு ஈஸ்வரன் துணையோடு மற்றும் மேலும் சில புதிய கட்சிகளை கைக்கோர்த்து கொண்டு அசுர பலத்தோடு 3 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியே ஆக வேண்டும் என்று வேலை செய்து வரும் தகவல்கள் அதிமுக தலைமைக்கு எட்டியது.
இந்தநிலையில், சற்று விலகியிருந்த செந்தில்பாலாஜியும் மெல்ல மெல்ல மீண்டும் தலைமையை நெருங்கினார். அதிகார மையத்தினரிடம் மீண்டும் நெருக்கமாகவும் ஆகியுள்ளார்.
எதிர்ககோஷ்டியினர் அடி அடியென அடித்தும், முட்டி மோதி அடித்து பிடித்து மீண்டும் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தும், தொடர் சரிவுகளை சந்தித்தாலும் மனம் தளராக அவர், அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அரை மணி நேரத்திற்குள் வாசலில் ஓடோடி வந்து நின்றவர்தான் செந்தில்பாலாஜி என்கிறார் பத்திரிக்கையாளர் ஒருவர்.
அன்று முதல் இன்று வரை தினந்தோறும் ஒரு கோவிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு அப்பல்லோ வாசலிலேயே வந்து நின்று கொண்டிருந்ததற்கான பரிசு தான் இது என்கிறார்கள் அதிமுக தொண்டர்கன்.
எது எப்படியோ இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அரவக்குறிச்சியில் மீண்டும் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.