ஒதுங்கும் சீனியர்கள்... கொரோனா முடியும் வரை வெயிட்டிங்... செந்தில் பாலாஜி திமுகவில் போடும் பலே திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 10, 2021, 6:01 PM IST
Highlights

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கட்சி முன்னோடிகளுக்கு தலைமையோடு போராடி பதவி வாங்கிக் கொடுத்த வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசான ஆ.ராஜா, கைவிட்டுப் போன பதவியை மீண்டும் பிடிக்க துடித்துக் கொண்டிருக்கிறார். 

சேலம் மாவட்டத்தின் ஒன்மேன் ஆர்மியாக வீரபாண்டி ஆறுமுகம் இருந்தபோது, அவரது படைத்தளபதிகளில் ஒருவராக இருந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் திடீரென்று கோலியாத்தை எதிர்த்த தாவீது கணக்காக வீறுகொண்டு எழுந்து நின்றார். வழக்கறிஞர் ராஜேந்திரனின் துணிச்சலைப் பார்த்து வியந்து போய், அன்றைய தினத்தில் இருந்து ராஜேந்திரனை தட்டிக்கொடுத்து வளர்ந்து வந்தார் தளபதி மு.க.ஸ்டாலின். வீரபாண்டி ஆறுமுகம் மறைந்ததையடுத்து, அவரது எதிரணியினர் முழுமையாக ராஜேந்திரன் பின்னால் அணிவகுத்தனர்.

ஆனாலும், அவரது இளைய மகன் வீரபாண்டி ஆ.ராஜா, தனது தந்தையின் செல்வாக்கை வைத்து சேலம் மாவட்டத்தில் அரசியல் செய்தார். இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது முட்டல் மோதல் எழுந்த வண்ணமே இருந்தன. இந்தநேரத்தில்தான், கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது வீரபாண்டி ஆ.ராஜாவிடம் இருந்த மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் சென்னையில் தங்கியிருந்த டி.எம்.செல்வகணபதியை சேலத்திற்கு அனுப்பி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டது.

தன்னிடம் இருந்த பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டதால் மனம் நொந்து போன வீரபாண்டி ஆ.ராஜா, அரசியலில் இருந்து துறவறம் பெற்றதைப் போல கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக அமைதியாகிவிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும் உற்சாகமாக களப்பணியாற்றவில்லை. சேலம் மாவட்டத்தில் தனது பரம வைரியான ஆ.ராஜேந்திரன் மட்டும் வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ., ஆனதால், எப்படியும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிடும். சேலம் மாவட்ட திமுக.வில் அவரது செல்வாக்கு ஓங்கிவிடும். வீரபாண்டி ஆறுமுகத்தின் புகழ் மங்கிவிடும் என்றெல்லாம் நினைத்து கவலையிலேயே மூழ்கியிருந்திருக்கிறார் ஆ.ராஜா.

ஆனால், ராஜேந்திரனுக்கு திமுக அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்காமல் தவிரிக்கப்பட்டதை கண்டு துள்ளிக்குதித்த வீரபாண்டி ஆ.ராஜா, அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் டக்கென்று ஒட்டிக் கொண்டார். ஆய்வுக் கூட்டமாக இருந்தாலும், பயணியர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டமாக இருந்தாலும் அமைச்சர் செந்தில்பாலாஜி அருகிலேயே அமர்ந்து உற்சாகமாக பேசுகிறார். நிறைய ஆலோசனைகளைக் கூறுகிறார். மற்றொரு பக்கம் திமுக எம்.பி. பார்த்திபனும், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உதவிக்கரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அமைச்சர் ஆய்வுப் பயணங்களுக்கு செல்லும் போது இருவருமே அவரது காரிலேயே பயணிக்கிறார்கள். சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் விலகி நிற்க, முன்னாள் எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா, ஏற்கெனவே தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியை மீண்டும் பெற்றுவிடும் எண்ணத்தோடு, அமைச்சர் செந்தில்பாலாஜியை தாஜா செய்து வருகிறார். மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோ கட்சிப் பதவியை பெறுவதற்காக அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆசியை முழுமையாக பெற ஓடியாடி வேலைப் பார்க்கிறார் திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன்..

சேலம் மாவட்டத்தின் திமுக நிர்வாகிகள் நவக்கிரகங்களைப் போல ஆளுக்கொரு திசையில் பயணிப்பதை கண்டு நொந்து போய்விட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. சீனியரான டி.எம்.செல்வகணபதியை சேலத்திலேயே முடக்கிப் போடாமல், சென்னைக்கு அழைத்து அண்ணா அறிவாலயத்தில் முக்கிய பதவியை கொடுக்க வைக்க வேண்டும் என்பதுதான் அமைச்சரின் யோசனையாக இருக்கிறது. அதேசமயம், சேலத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்குகூட மாவட்ட அளவில் பதவி வழங்காமல், கடந்த பத்தாண்டுகளாக அரசியல் செய்து வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியைப் போல, திமுக.விலும் மாவட்டப் பொறுப்புகளில் பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்கும் யோசனையும் அமைச்சரிடம் எழுந்துள்ளது.

கொரோனோ தொற்று கட்டுக்குள் வந்தவுடன், சேலம் மாவட்ட திமுக.வை சீரமைக்கும் நடவடிக்கைகளில் அதிரடி வேகத்தை காட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி முடிவு செய்திருக்கிறார். அப்போது யார் யாருடைய தலைகள் உருளப் போகிறதோ? என்று கேள்விக்குறியோடு பேசி முடித்தார் கரூர் மாவட்ட திமுக நிர்வாகி. சேலம் மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கட்சி முன்னோடிகளுக்கு தலைமையோடு போராடி பதவி வாங்கிக் கொடுத்த வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசான ஆ.ராஜா, கைவிட்டுப் போன பதவியை மீண்டும் பிடிக்க துடித்துக் கொண்டிருக்கிறார். 
 

click me!