இயக்குனர் மணிரத்னத்துக்கு ஆதரவாக களம் இறங்கிய என்.ராம்...!! கருத்து சொல்வது தவறா என கேள்வி..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2019, 9:16 AM IST
Highlights

49 பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது,  இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 நாட்டின் குடிமகனுக்கு வழங்கியுள்ள கருத்துரிமைக்கு எதிரானது. இதுபோன்ற  வழக்குகளுக்கு சமூகத்தில் பிரபலமானவர்கள் எதிர்வினை ஆற்ற வேண்டும்,  இல்லாவிட்டால் மத்திய அரசின் மீது மக்கள் மத்தியில் ஒருவித பயம் ஏற்படும் என்றார்.

மதவெறி தாக்குதல்களைத் தடுக்க வேண்டும் எனக்கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதியதற்காக வழக்கு பதிவு செய்திருப்பது நாட்டு மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தும் செயல், என்பதுடன் இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனே திரும்ப பெற வேண்டுமென மூத்த பத்திரிகையாளர் என்.ராம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்தை சேர்ந்த பிரபல இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி எழுத்தாளர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள் என்ற காரணத்திற்காக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது நாட்டில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித் மக்கள் மீது மதத்தின் பெயரால் நடத்தப்படும் தாக்குதல்களை  தடுக்க வேண்டுமென பாரத பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், பாராளுமன்றத்தில் இஸ்லாமிய மற்றும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டிக்கும் பிரதமர் மோடி, அதை உடனே தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்ணிருந்தனர். 

மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள்  பிரதமர் மோடிக்கு எழுதிய இந்த கடிதம், இந்தியாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதுடன், பிரதமரின் பணிகளை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது, அத்துடன் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் இது எனக்கூறி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர்  முசாபர்பூர் நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.  அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரைத்துறையினர் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இந் நிலையில் திரைத் துறையைச் சார்ந்த ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒருவர் தனது கருத்தை சொல்வது எப்படி தேச துரோகத்திற்கு ஒப்பாகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.  திமுக தலைவர் ஸ்டாலின், 49 பிரபலங்கள் மீது பதியப்பட்ட வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் என்ன அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இந்நிலையில் இந்து  குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் , மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள் என்ற காரணத்திற்காக 49 பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது,  இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 நாட்டின் குடிமகனுக்கு வழங்கியுள்ள கருத்துரிமைக்கு எதிரானது. இதுபோன்ற  வழக்குகளுக்கு சமூகத்தில் பிரபலமானவர்கள் எதிர்வினை ஆற்ற வேண்டும்,  இல்லாவிட்டால் மத்திய அரசின் மீது மக்கள் மத்தியில் ஒருவித பயம் ஏற்படும் என்றார். ஏற்கனவே இந்தியா முழுவதும் பரவலாக மத்திய அரசின் மீது ஒரு வித அச்ச உணர்வு  இருந்து வரும் நிலையில், 49 பிரபலங்கள் மீது பதியப்பட்டுள்ள தேச துரோக வழக்கு மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்றார். கருத்தை வெளிப்படையாக பேசினால் ஏதாவது வழக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தை இந்த வழக்குகள் ஏற்படுத்தியுள்ளது. எனவே இயக்குனர் மணிரத்னம்,  உள்ளிட்ட 49 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதித்துறை  செயல்பட வேண்டிய விதத்தில் செயல்படவில்லை என்றும் என்.ராம் குற்றஞ் சாட்டியுள்ளார்.

click me!