மூத்த எக்ஸ் மினிஸ்டர்கள் சைலன்ட்..! அதிர்ச்சியில் எடப்பாடியார்..! இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்..!

By Selva KathirFirst Published May 8, 2021, 11:22 AM IST
Highlights

கடந்த நான்கு வருடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் சிலரே எதிர்கட்சி தலைவர் விவகாரத்தில் சைலன்ட் மோடிற்கு சென்றுவிட்டனர்.

கடந்த நான்கு வருடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் சிலரே எதிர்கட்சி தலைவர் விவகாரத்தில் சைலன்ட் மோடிற்கு சென்றுவிட்டனர்.

அதிமுக யார் கட்டுப்பாட்டில் செயல்படப்போகிறது என்பதை தற்போது தீர்மானிக்கப்போவது எதிர்கட்சித் தலைவர் பதவி தான். இதுநாள் வரை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவர் பதவியை பெறுவதில் தீவிரமாக உள்ளார். அதே சமயம் ஏற்கனவே முதலமைச்சர் வேட்பாளர் பதவியை விட்டுக் கொடுத்த ஓபிஎஸ் இந்த முறை எதிர்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. தேர்தலில் வென்ற 66 எம்எல்ஏக்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள். ஆனால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் அடிப்படையில் ஓபிஎஸ்சுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை.

இதனால் கட்சியின் சீனியர்கள் ஒன்று கூடி எதிர்கட்சி தலைவரை ஒருமித்த மனதுடன் தேர்வு செய்ய திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஒன்று கூடினர். ஆனால் கூட்டம் நடைபெற்ற இடம் மட்டும் அல்ல வெளியேயும் ஓபிஎஸ் – இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்து அதிமுகவினர் முழக்கமிட்டதோடு ஒருவரை ஒருவர் வசைபாடவும் தயங்கவில்லை. இதனால் அதிமுக அலுவலகம் முன்பு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

கூட்டம் தொடங்கியதும் தோல்விக்கு யார் காரணம் என்கிற பேச்சு எழுந்தது. பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்ட அதிருப்தியே காரணம் என்றும் மக்கள் திமுகவிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வாக்களித்துவிட்டதாக எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் தேர்தல் சமயத்தில் அவசர அவசரமாக வெளியிட்ட சில அறிவிப்புகள் தான் அதிமுக தென் மாவட்டங்களில் தோல்வி அடைய காரணம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூற ஆரம்பித்தனர். அதிலும் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு என்கிற அறிவிப்பு தான் தென் மாவட்டங்களில் அதிமுகவை காலி செய்துவிட்டதாக ஓபிஎஸ்சுக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

இப்படி காரசார வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஏற்கனவே எதிர்கட்சித் தலைவராக இருந்த ஓபிஎஸ்சை மறுபடியும் அந்த பதவியில் அமர்த்த வேண்டும் என்று சிலர் குரல் கொடுத்துள்ளனர். அதே சமயம் முதலமைச்சர் வேட்பாளராக இருந்து அதிமுக படு தோல்வி அடையாமல் கவுரவமான வெற்றியை பெற எடப்பாடி பழனிசாமியே காரணம் எனவே அவர் தான் எதிர்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று சிலர் குரல் கொடுத்தனர். இந்த சமயத்தில் ஏற்கனவே எடப்பாடியாரோடு நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் சைலன்ட் மோடிற்கு சென்றுவிட்டனர். அவர்கள் எடப்பாடியாருக்கு ஆதரவாக பேசவில்லை என்று கூறுகிறார்கள்.

அதே சமயம் எடப்பாடியார் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளரக்ள் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்தி பேசிக் கொண்டே இருந்துள்ளனர். இதனால் எதிர்கட்சித்தலைவர் யார் என்று இறுதி செய்ய முடியாத சூழல் இருந்தது. பிறகு கட்சியின் சீனியர்களான கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வைத்திலிங்கம் ஆகியோர் எடப்பாடியார் மற்றும் ஓபிஎஸ்சுடன் தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது எதிர்கட்சித்தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் இருவரும உறுதியாக இருந்துள்ளனர். இதனால் நேற்றைய கூட்டத்தில் எவ்வித முடிவையும் எடுக்க முடியவில்லை.

எனவே வரும் திங்கட்கிழமை தேர்தலில் வென்ற அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டத்தை மட்டும் கூட்டியுள்ளனர். இந்த கூட்டத்தில் யாருக்கு அதிக ஆதரவு என்பதை பொறுத்து எதிர்கட்சித்தலைவர் தேர்வு நடைபெறும் என்கிறார்கள்.

click me!