கொள்கைக்காக இறுதிவரை போராடுவதே தங்கள் வெற்றி என்றும், மத்திய மோடி அரசை கண்டித்து சண்டையிட உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கொள்கைக்காக இறுதிவரை போராடுவதே தங்கள் வெற்றி என்றும், மத்திய மோடி அரசை கண்டித்து சண்டையிட உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல கட்சிகளின் தலைவர்கள் பம்பரமாய் சுழன்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போல உள்ளாட்சி தேர்தலிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரான சட்டம் என்று கூறினார். புதிய வேளாண் சட்டம், மீனவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் சட்டங்களை எதிர்ப்போம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் விவசாயத்தை காக்க வேண்டும் என்றால் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று சீமான் ஆவேசத்துடன் கூறினார்.
அதேபோல், இந்து மதம் தமிழ் பற்றி எச்.ராஜாவின் கருத்துக்கு பதில் கூறிய சீமான், இந்து மதத்திற்கு தமிழுக்கும் தொடர்பு இல்லை என்றார். சைவத்திற்கும் தமிழ் மொழிக்கும் மட்டுமே சம்மந்தம் உண்டு என்றும் சீமான் தெரிவித்துள்ளார். எச்.ராஜா ஒரு அர மெண்டல் என கடுமையாக சாடிய சீமான், தன் இருப்பைக் காட்டிக்கொள்ள எச்.ராஜா எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 12 சதவீத வாக்குகள் கிடைத்ததை சுட்டிக்காட்டியுள்ள சீமான், கொள்கைக்காக இறுதிவரை போராடுவதே தங்களின் வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.