
மதுரை பெத்தானியாபுரத்தில் நடந்த நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ “தமிழகத்தில் கடந்த ஆண்டு மூவாயிரத்து ஐநூறு பே பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு 1020 பேருக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆக ஜெயலலிதா மீது மக்கள் கொண்ட அன்பினால்தான் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தமிழ்நாட்டில் குறைந்திருக்கிறது.” என்று பேசியிருப்பது அமைச்சரவைக்குள் தாறுமாறாக நகைப்பையும், கடுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
(இவிய்ங்க இப்டித்தாம்ணே! நீங்க கலக்குங்கண்ணே)
இலங்கையின் அரச நிர்வாகத்தில் மீண்டும் ராஜபக்ஷேவின் நுழைவு, நாடாளுமன்ற கலைப்பு என்று பெரும் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஆனால் இந்த விஷயங்களுக்கெல்லாம் முன்பு போல் இல்லாமல் சற்றே குறைந்த வீரியத்துடன் தான் வைகோ ரியாக்ட் செய்கிறார், எல்லாம் தி.மு.க. கூட்டணிக்குள் ஒட்டியிருக்கும் காரணத்தால்தான்! என்று சிலர் இணையதளங்களில் வெடி விமர்சனங்களைக் கிளப்பிக் கொண்டுள்ளனர்.
(புயலுக்கு இது தெரிந்தால் பூகம்பம்தான்!)
கோடிக்கோடியாய் சம்பளம் வாங்கும் திரையுலகினர் மக்களுக்கு என்ன நன்மையை செய்திருக்கின்றனர்? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளதை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அதிதீவிர அபிமானிகளால் ரசிக்க முடியவில்லையாம்.
(ஒருவேளை முதல்வர் மறந்து பேசிட்டாரோ!?)
20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்து, அதன் முடிவுகள் ஆட்சியையே காவு வாங்குமளவுக்கு இருந்துவிட்டால் என்ன செய்வது? என்று சில அமைச்சர்களுக்கு உதறல் வந்துவிட்டதாம். இதனால் இரு ஒருங்கிணைப்பாளர்களிடமும் ‘ஏதாவது செய்யுங்கள்’ என்று சங்கேத வார்த்தையில் சம்சாரிக்கிறார்களாம்.
(பிடலுக்கும், சேகுவுக்கும் தெரிந்தது புரட்சிதானே?)
ரிசர்வ் வங்கியின் மாஜி ஆளுனர் ரகுராம் ராஜனின் ‘பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்தாண்டு பின் தங்கியது’ எனும் வார்த்தைகள் சர்வதேச அளவில் மோடி அரசை உலுக்கி எடுத்துள்ளனவாம்.
(பூ-வை பூன்னும் சொல்லலாம், புய்ப்பமுன்னும் சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்)