வெள்ளத்தை தடுக்க செலவிடப்பட்ட 4 ஆயிரம் கோடி கடலுக்குள் போய்விட்டதா? திமுகவை விளாசும் செல்லூர் ராஜூ

By Ajmal Khan  |  First Published Dec 8, 2023, 1:18 PM IST

நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் விலக்கு அளிக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்லூர் கே. ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார். 
 


சென்னை வெள்ள பாதிப்பு- அதிமுக உதவி

மிக்ஜாம் புயல் தாக்குதலால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது., இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, உணவு, மின்சாரமின்றி பலரும் மழைநீரில் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட பரவை அதிமுக.,வினர் சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

Tap to resize

Latest Videos

" வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சொந்தங்களுக்கு மதுரை பரவை பேரூர் கழகம் சார்பாகவும், பேரூராட்சி சார்பாகவும் சீறிய ஏற்பாட்டால் சென்னைக்கு பல்வேறு நிவாரண பொருட்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிதண்ணீர் ஒரு லிட்டர் பாட்டில் 12 ஆயிரம்,  5 கிலோ அளவு கொண்ட  அரிசி பாக்கெட் 15ஆயிரமும். அதே போல் 25 கிலோ அரிசி மூடை ஆயிரம் மூட்டையும், மேலும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி என பல்வேறு உணவுப் பொருட்களையும் இந்த வாகனத்தில் கொண்டு செல்லப்படுகிறது. 

சுங்கவரி கட்டணம் ரத்து செய்திடுக

புயல் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 4 நாட்கள் ஆன பிறகும் சென்னையில் வெள்ளம் பல்வேறு இடங்களிலும் வடியாமல் இருக்கிறது. இதுதான் திராவிட மடலா ? இந்த திராவிட மாடலை தான் இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சொல்லினார்களா? என கேள்வி எழுப்பினார். அமைச்சர்கள் வாய்கிழிய பேசினார்கள் ஆனால் தற்போது நடந்து கொண்டிருப்பது என்ன என விமர்சித்தார். 

சென்னைக்கு செல்லக்கூடிய அனைத்து நிவாரண வாகனங்களுக்கும் சுங்கவரி கட்டணம்  இல்லாமல் அனுமதிக்க வேண்டும். அதேபோல பொருட்களை முறையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்ப வேண்டும். நிவாரண பொருட்களை யாரும் சூறையாடிவிட்டு சென்று விடக்கூடாது. அதேபோல் வெள்ளம் ஏற்பட்டது குறித்தும் அதற்கு முன்னதாக செலவு செய்திருந்தது குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 

4ஆயிரம் கோடி என்ன ஆனது.?

தற்போது பெய்தது ஓரளவு மழை தான். அதற்கே தாங்கவில்லை. ரூ.4000  கோடி பணம் என்னானது? கடலுக்குள் போய்விட்டதா என்று தெரியவில்லை. அரசு முழுமையாக எல்லாத்தையும் செய்ய முடியாது அதனால் தான் பலரும் உதவி செய்து வருகிறது. மதங்களை கடந்து மனிதாபிமான குழு உதவி செய்து வருகின்றனர். முதலமைச்சர் தொகுதியிலேயே மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறார்கள். மக்கள் தற்போது கொந்தளிப்பில் உள்ளனர்.  வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குறித்த அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும். அவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்க வேண்டும் என செல்லூர் ராஜூ கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

மிக்ஜாம் புயல் பாதிப்பு! ஒரு மாத ஊதியத்தை வழங்கிய ஸ்டாலின்- தாராளமாக நிதி உதவி அளிக்க பொதுமக்களுக்கு கோரிக்கை
 

click me!